சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் எல்லைத் தாண்டி ஊழியர்களுக்காக சிறப்பு பொருளாதார மண்டலம்: இத்தாலியின் திட்டம்
சுவிட்சர்லாந்துடன் எல்லை பகிர்ந்து கொள்ளும் பகுதிகளில் பணிபுரியும் எல்லைத் தாண்டி ஊழியர்களை நோக்கி, இத்தாலி அரசு ஒரு புதிய சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க உறுதியளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வாரேசே, கோமோ, சொந்த்ரியோ மற்றும் வெர்பானோ-கூசியோ-ஒசோலா ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய எல்லைப் பகுதிகளில் Special Economic Zone (SEZ) உருவாக்கப்பட உள்ளது.
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி இடையிலான ஊதிய வித்தியாசத்தை குறைப்பதாகும். அதற்காக, வரிவிலக்கு உள்ளிட்ட பல நிதி சலுகைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் வேலை செய்யும் எல்லைத் தாண்டி ஊழியர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் “எல்லை போனஸ்” (border bonus) என்ற புதிய ஊக்கத்தொகையும் இதில் அடங்கும்.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சுவிட்சர்லாந்தின் Ticino கன்டோனின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது. டிசினோ கன்டோனின் வர்த்தக சபைத் தலைவர் Luca Albertoni கூறுகையில், தற்போது கன்டோனில் பணியாற்றி வரும் சுமார் 70,000 எல்லைத் தாண்டி ஊழியர்களில் ஒரு பகுதியை இந்த புதிய இத்தாலிய திட்டம் இழுக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் எல்லைப் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை அதிகரித்து, உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்ய வேண்டிய அவசியத்தை குறைப்பதே இந்த SEZ திட்டத்தின் நீண்டகால இலக்காக கூறப்படுகிறது. ஆனால், இது சுவிட்சர்லாந்தின் எல்லைப் பகுதிகள், குறிப்பாக டிசினோ கன்டோனில் தொழிலாளர் சந்தை மற்றும் நிறுவனங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.