சுவிட்சர்லாந்தில் கல்லறைகளுக்கு அருகில் திறக்கப்படும் உணவகம்
சுவிட்சர்லாந்தில் வரலாற்றில் முதன்முறையாக, பேர்ன் நகரில் உள்ள Bremgartenfriedhof கல்லறை வளாகத்தில் ஒரு உணவகம் திறக்கப்பட உள்ளது. “வாழ்க்கையும் மரணமும் இயல்பாக சந்திக்கும் இடம்” எனக் கருதப்படும் இந்த திட்டம், ஜனவரியில் திறக்கப்பட உள்ளது.
கல்லறை வளாகத்தில் புதுமை
1908-ல் கட்டப்பட்ட இந்த தகனக் கூடம் (crematorium) அழகிய கட்டிடக் கலையால் பிரசித்தி பெற்றது. அதன் அருகிலுள்ள இரண்டு மண்டபங்கள் முன்னர் சாம்பல் குடுவைகளை (urns) வைக்கப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், காலப்போக்கில் மக்கள் சாம்பல் குடுவைகளை வீடு கொண்டு செல்வதோ, குறிப்பிட்ட இடங்களில் சாம்பலை சிதறடிப்பதோ வழக்கமாகிவிட்டதால், அந்த அறைகள் வெறிச்சோடியன.
“இந்த இடங்களை அகற்ற இயலாது, ஏனெனில் இது பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. எனவே, புதிய பயனுள்ள பயன்பாட்டைத் தேட வேண்டியிருந்தது,” என தகனக் கூட பொறுப்பாளர் மிரியம் வேலியோ (Mirjam Veglio) தெரிவித்தார்.

உணவகம் “La Vie” – வாழ்க்கையின் சின்னம்
20 ஆண்டுகளுக்கு முன்பே கஃபே (Cafe) அல்லது Bar ராக மாற்றும் யோசனை எழுந்திருந்தாலும், கடந்த ஆண்டு தான் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. ஆலோசனைக்காலத்தில் எந்த நெறிமுறை அல்லது நம்பிக்கை சார்ந்த எதிர்ப்புகளும் வரவில்லை. ஆனால் சட்டரீதியான மற்றும் அனுமதிகள் தொடர்பான கேள்விகள் மட்டுமே எழுந்தன, ஏனெனில் இது சுவிட்சர்லாந்தில் முன்னோடி முயற்சி.
புதிய உணவகம் “La Vie” (“வாழ்க்கை”) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் அமைதியான கலாச்சார நிகழ்ச்சிகள், வாசிப்பு நிகழ்ச்சிகள், அல்லது இறுதி சடங்குகளுக்குப் பின் உறவினர்கள் கூடும் சந்திப்புகள் நடைபெறலாம்.
எல்லோருக்கும் திறந்த இடம்
“மரணத்துடன் தொடர்புடைய இடமெனினும், இங்கு ஒரு ஒளிமயமான சூழலை உருவாக்க விரும்புகிறோம்,” என வேலியோ வலியுறுத்தினார். இறுதிச்சடங்குகளுக்குப் பிறகு உறவினர்களுடன் அமர்ந்து சுலபமாக பேசவும் உணவருந்தவும் மக்களுக்கு தேவை ஏற்படும் என்று அவர் கூறினார்.
இந்த உணவகம், துக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், சுற்றுப்புற மக்களுக்கும், அமைதியைத் தேடும் பயணிகளுக்கும், கலாச்சார அல்லது மத பேதமின்றி அனைவருக்கும் திறந்திருக்கும்.