“10 மில்லியன் சுவிட்சர்லாந்து வேண்டாம்” முன்மொழிவுக்கு எதிராக அரசு பிரச்சாரம் தொடக்கம்
சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள “10 மில்லியன் சுவிட்சர்லாந்து வேண்டாம்” என்ற மக்களாட்சி முன்மொழிவுக்கு எதிராக கூட்டாட்சி அரசு தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தை சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் பீட் யான்ஸ் (Beat Jans) பெர்ன் (Bern) நகரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.
இந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டால் சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) உள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான தொழிலாளர் சுதந்திரப் பயணம் (Free Movement of People) ஒப்பந்தம் முடிவுக்கு வரக்கூடும் என்ற கவலை அரசாங்கத்துக்கு உள்ளது.

சுவிஸ் மக்கள் இந்த முன்மொழிவை 2026 ஜூன் 14ஆம் தேதி நடைபெறும் தேசிய வாக்கெடுப்பில் தீர்மானிக்க உள்ளனர். இந்த முன்மொழிவின் முக்கிய நோக்கம் 2050ஆம் ஆண்டுக்குள் சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை அதிகபட்சம் 10 மில்லியனாக மட்டுப்படுத்துவது ஆகும். இதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உள்ள சுதந்திர தொழிலாளர் இயக்க ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய சூழல் உருவாகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்கனவே காணப்படும் தொழிலாளர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என்று கன்டோன்கள் மற்றும் தொழில் அமைப்புகள் எச்சரித்துள்ளன. குறிப்பாக கிராமப்புற பகுதிகளிலும் சுகாதாரத் துறையிலும் பணியாளர் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த முன்மொழிவு சுவிட்சர்லாந்தின் ஷெங்கன் (Schengen) விசா இல்லா பயண ஒப்பந்தத்தில் உள்ள உறுப்பினர் நிலையும் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. அதேபோல் சட்டவிரோத குடியேற்றங்களை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கான டப்ளின் (Dublin) ஒப்பந்தத்துடனான ஒத்துழைப்பும் சிக்கலாகலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தின் குடியேற்றக் கொள்கை, மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகள் குறித்து இந்த வாக்கெடுப்பு முக்கியமான அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது. வரும் மாதங்களில் இந்த முன்மொழிவைச் சுற்றிய அரசியல் பிரச்சாரம் மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
WRS