Rümlang (றும்லங்க்) பகுதியில் துப்பாக்கிச் சத்தம் என அச்சம் – இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது
சனிக்கிழமை அதிகாலை நள்ளிரவுக்குப் பிறகு, சுவிட்சர்லாந்தின் Rümlang நகரில் உள்ள Ifangstrasse பகுதியில் துப்பாக்கிச் சத்தம் போன்ற ஒலிகள் கேட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக ‘படார்’ என சத்தம் கேட்டதாக கூறிய சிலர், இது வெடிக்கற்கள் அல்லது பட்டாசாக இருக்கலாம் என முதலில் நினைத்ததாகவும், மதுபானம் அருந்திய இளைஞர்களின் செயல் என கருதியதாகவும் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் இரு 16 வயதுடைய இளைஞர்கள் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அண்டை வீட்டார் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளிக்க, உடனடியாக Kantonspolizei Zürich ரோந்து குழு சம்பவ இடத்துக்கு சென்று, அந்த இரு இளைஞர்களையும் தடுத்து வைத்தது. இந்த நடவடிக்கை, அங்கு இருந்த ஒருவர் தனது கைப்பேசி மூலம் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

பொலிசார் தெரிவித்ததன்படி, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருள், உண்மையான துப்பாக்கியைப் போல தோற்றமளிக்கும் ஒரு பயமுறுத்தும் (Schreckschuss) துப்பாக்கியாக இருக்கலாம். அந்த ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அது ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் சுட்டதா அல்லது சத்தம் மட்டும் எழுந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இரு இளைஞர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக Zurich கன்டோன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
© Kapo ZH