சூரிச்சில் மதிப்புமிகு உலோக விற்பனையகங்களில் திடீர் சோதனை : சிக்கிய 6 நிறுவனங்கள்.!!
சூரிக் நகரத்தில் உள்ள பல மதிப்புமிகு உலோக விற்பனையகங்களில் சூரிக் கண்டோன் காவல்துறை 2025 நவம்பர் 18 அன்று நடத்திய சோதனையில், பரிசோதிக்கப்பட்ட 13 நிறுவனங்களில் 6 இடங்களில் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டன.
சூரிக் காவல்துறை, பொருளாதாரம் தொடர்பான அலுவலகத்துடன் இணைந்து தங்கம், வெள்ளி ஆலைகள், பழைய நகை வாங்கும் நிலையங்கள் மற்றும் விற்பனைக்காக மதிப்புமிக்க உலோகப் பொருட்கள் வைத்திருந்த கடைகள் உள்ளிட்ட மொத்தம் 13 நிறுவனங்களை விரிவாகச் சோதனை செய்தது. இந்த நடவடிக்கையின் போது உரிய அனுமதி மற்றும் பதிவு இல்லாமை, ஆவணப்படுத்தல் விதிகளை பின்பற்றாதது, மதிவிலக்கு வரி சட்ட மீறல்கள், அளவுகோல் மற்றும் எடைக்கருவிகளுக்கான சட்ட மீறல்கள் ஆகியவை பல இடங்களில் கண்டறியப்பட்டன.

ஒரு நிறுவனத்தில் ஒழுங்கு மீறிய கணக்குப்பதிவு நடைமுறைகள் இருந்ததால், அந்த நிறுவனம் வழக்கறிஞர் அலுவலகத்தின் முன் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், ஒரு கடையில் மதிப்புமிகு உலோகப் பரிவர்த்தனைக்கு தகுதியற்ற எடை கருவி பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு நிறுவனத்தின் விவகாரம் தொடர்பாக கூடுதல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
காவல்துறை பொதுமக்களுக்கு தங்கம், நகை போன்ற மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்யும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. விற்பனையாளர்கள் சுவிஸ் கூட்டாட்சி அமைப்பில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பழைய தங்கத்தை விற்கும்போது போட்டி விலைகளை அறிந்துகொள்வது, அழுத்தப்படாமல் முடிவெடுப்பது, சரியான ரசீது பெறுவது போன்ற முன்னெச்சரிக்கை நடைமுறைகள் மோசடிகளைத் தடுக்க உதவும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
© Kapo ZH