சுவிட்சர்லாந்தில் காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டின் காய்ச்சல் காலம் வழக்கத்தை விட முன்பே தொடங்கியுள்ள நிலையில், தற்போது இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நவம்பர் மாத இறுதியில் ஆரம்பமான இந்த காய்ச்சல் பரவல், டிசம்பர் தொடக்கத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி பொது சுகாதார அலுவலகம் (FOPH) வெளியிட்ட அறிக்கையின் படி, டிசம்பர் முதல் வாரமாகிய 49வது வாரத்தில், இன்ஃப்ளூயன்சா போன்ற அறிகுறிகளுக்காக மருத்துவரை அணுகும் மக்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை கடந்துள்ளது. அதேபோல், ஆய்வக பரிசோதனைகளில் வைரஸ் உறுதியாகும் விகிதமும் நிர்ணய அளவை மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கிடைக்கப்பெறும் அனைத்து கண்காணிப்பு மற்றும் அறிக்கை அமைப்புகளும், நாட்டில் காய்ச்சல் பரவல் ‘கணிசமாக உயர்ந்து வருகிறது’ என்பதையே சுட்டிக்காட்டுவதாக சுவிட்சர்லாந்து கூட்டாட்சி பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் நோயாளிகளின் வருகை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் குளிர்காலம் தொடங்கும் காலகட்டத்தில் பொதுவாக காய்ச்சல் பரவல் அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு, பள்ளிகள், பொது போக்குவரத்து மற்றும் அலுவலகங்களில் மக்கள் நெருக்கம் அதிகரித்துள்ளதால், வைரஸ் வேகமாக பரவி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வயதானவர்கள், சிறுவர் மற்றும் உடல் நலக் குறைவு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் தடுப்பூசி, கை சுத்தம், முகக்கவசம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நோய் பரவலை கட்டுப்படுத்த உதவும் என்றும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.