ஜெனீவா வான்பரப்பில் மயிரிழையில் தவிர்க்கப்பட்ட விமான விபத்து.!!
ஜெனீவா, 27 நவம்பர் 2024 – கிரேக்க நிறுவனமான (ஏஜியன்) Aegean Airlines-இன் ஏர்பஸ் A320 neo விமானம், ஜெனீவா-கொயின்ட்ரின் (Geneva-Cointrin) விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டது.
ஜெனீவா ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி, விமானம் Lake Geneva மீது வெறும் 80 மீட்டர் உயரத்தில் பறந்துள்ளது. அந்த நேரத்தில், அது குறைந்தபட்சம் 300 மீட்டர் அதிக உயரத்தில் இருக்க வேண்டியது.
திடீர் எச்சரிக்கை – 10 விநாடிகளில் விபத்து தவிர்க்கப்பட்டது
விமானத்தின் தானியங்கி எச்சரிக்கை அமைப்பும், கட்டுப்பாட்டு கோபுரமும் ஒரே நேரத்தில் அபாயச் சிக்னல் கொடுத்தன. உடனடி அவசர நடவடிக்கையால், விமானிகள் அவசர ரீ-அட்டாக் (go-around maneuver) செய்து உயரத்தை மீட்டனர். இதைச் செய்ய தவறியிருந்தால், வெறும் 10 விநாடிகளில் விமானம் ஏரியில் மோதி நொறுங்கியிருக்கும் என விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 நிமிடங்களுக்கு பிறகு, அந்த விமானம் பாதுகாப்பாக ஜெனீவா-கொயின்ட்ரின் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமானம் ஓரளவிற்கு சரியான பாதையில் இருந்தாலும், அது மிக உயரத்தில் இருந்ததால் தானியங்கி தரையிறங்கும் அமைப்புடன் (ILS) இணைக்கப்படவில்லை. இதை சரி செய்ய, விமானிகள் மிகுந்த சாய்வுடன் இறங்கும் முயற்சி செய்ததால், வழக்கமான பாதையை மீறி கீழே இறங்கியுள்ளனர். பின்னர் அவசரமாக பாதையைச் சரி செய்தனர்.
விசாரணை நடைபெறுகிறது
இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதத்தில் வெளிப்படுத்தப்பட்டது. சுவிஸ் பாதுகாப்பு விசாரணை சேவை (SISI) இன்னும் விரிவான அறிக்கையை வெளியிடவில்லை.
இது தனித்த சம்பவம் அல்ல. ஏற்கனவே நவம்பர் 2023-இல் EasyJet நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் விமானமும், இதேபோன்ற சூழ்நிலையில், Lake ஜெனீவா மீது ஆபத்தான நிலையில் பறந்தது. ஆனால், சுவிஸ் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து அலுவலகம் (FOCA) தெரிவித்ததாவது – இந்த இரு சம்பவங்களுக்கு நேரடி தொடர்பில்லை, மேலும் விமானத்தின் கட்டமைப்பில் பிரச்சனைகள் இல்லை எனவும் கூறியுள்ளது.
@KeystoneSDA