சுவிட்சர்லாந்தில் பல உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லி மருந்து மீதங்கள்: ஆய்வு
சுவிட்சர்லாந்தில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் பெரும்பாலானவற்றில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் மீதங்கள் காணப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் முடிவுகள், உணவு பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் கவலைகளை மேலும் அதிகரித்துள்ளன.
2024 ஆம் ஆண்டில் பரிசோதனை செய்யப்பட்ட 405 உணவு மாதிரிகளில், 63 சதவீத மாதிரிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் மீதங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை விவகார அலுவலகம் (Federal Office of Food Safety and Veterinary Affairs) ஆண்டு அறிக்கையின் படி, இந்த மாதிரிகளில் 10 உணவுப் பொருட்கள் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவை மீறியிருந்தன.
இந்த 10 விதிமீறல் சம்பவங்களில், 7 வழக்குகளில் அந்த மீறல்கள் புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்கவை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதிகமாக பாதிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் ஆப்ரிகாட் மற்றும் ஸ்ட்ராபெரி போன்ற பழங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இவற்றில் கேப்டன், ஹாலோக்ஸிஃபாப், இப்ரோடியோன், ஸ்பினோசாட் உள்ளிட்ட பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகளின் மீதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு பழங்களுக்கு மட்டுமல்லாமல், கேரட், சுரைக்காய் போன்ற காய்கறிகள், தானியங்கள் மற்றும் தாவர எண்ணெய்கள் உள்ளிட்ட பல்வேறு அன்றாட உணவுப் பொருட்களையும் உள்ளடக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், உணவுக் கட்டமைப்பின் பல நிலைகளிலும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டின் தாக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச அளவுகள் மனித ஆரோக்கியத்திற்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தும் அளவுகளை விட பரந்த பாதுகாப்பு இடைவெளியுடன் நிர்ணயிக்கப்பட்டவை என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதாவது, அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் உள்ள மீதங்கள் உடனடி சுகாதார அபாயத்தை ஏற்படுத்தாது என்பதே அவர்களின் நிலைப்பாடு.
ஆயினும், உணவுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் மீதங்கள் தொடர்ந்து கண்டறியப்படுவது குறித்து பொதுமக்களிடையே கவலை அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தொடர்பான நீண்டகால சுகாதார பாதிப்புகள் குறித்து அதிக விவாதங்கள் எழுந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், எதிர்காலத்தில் மேலும் கடுமையான கண்காணிப்பு மற்றும் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.