இளைஞர்களின் சமூக ஊடக பயன்பாடு: கடும் கட்டுப்பாடுகள் கோரும் அரசியல் அழுத்தம்
இளைஞர்கள் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவது குறித்து, சுவிட்சர்லாந்தில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தீர்மானம் ஒன்று, இளைஞர்களை தொடர்ந்து திரையில் கட்டிப்போடும் சமூக ஊடக அல்கோரிதம் அமைப்புகளை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இந்த தீர்மானத்தை முன்வைத்தவர்களில் ஒருவர், தற்போதுள்ள சட்டங்கள் பெரும்பாலும் வயது வரம்பு போன்ற அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்றும், பயனர்களின் கவனத்தை அதிக நேரம் பிடித்து வைத்திருக்கவும், ஒரே உள்ளடக்கத்தை மீண்டும் மீண்டும் காட்டவும் திட்டமிடப்பட்டுள்ள தொழில்நுட்ப அமைப்புகள் குறித்து போதிய கவனம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய அமைப்புகளே இளைஞர்களை சமூக ஊடகங்களில் அடிமையாக வைத்திருப்பதற்கான முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ள இந்த முன்மொழிவு, அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, இளைஞர்களின் மனநலம் குறித்த பரவலான கவலையை பிரதிபலிக்கிறது. குறிப்பாக, சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு மனஅழுத்தம், கவலை மற்றும் தன்னம்பிக்கை குறைவு போன்ற பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருப்பதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதேவேளை, Federal Council இதுவரை எச்சரிக்கையான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறது. உடனடி சட்ட மாற்றங்களை விட, கூடுதல் ஆய்வுகள் மற்றும் தரவுகள் தேவை என்று அரசாங்கம் கருதுகிறது. ஆனால், விமர்சகர்கள் இந்த தாமதம், இளைஞர்களை பாதுகாப்பற்ற நிலையில் விட்டுவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையில், நிபுணர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லை. சிலர் முதலில் கடுமையான ஒழுங்குமுறைகள் அவசியம் என வலியுறுத்துகின்றனர்; மற்றவர்கள் கல்வி, விழிப்புணர்வு மற்றும் பெற்றோர் வழிகாட்டுதல் மூலமே நீண்டகால தீர்வு கிடைக்கும் எனக் கூறுகின்றனர். சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள், சமூக ஊடகம், மனநலம் ஆகிய விடயங்களைச் சுற்றிய விவாதம் வரும் காலங்களில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© WRS