சுவிட்சர்லாந்தில் வங்கிப் பயனர்களை குறிவைக்கும் புதிய ‘callback’ மோசடி குறித்து எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி சைபர் பாதுகாப்பு அலுவலகம், வங்கி மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்தும் மக்களை குறிவைத்து நடைபெறும் புதிய வகை மோசடி அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கமான பிஷிங் மோசடிகளை விட இது முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதால், பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
இந்த புதிய ‘கால் பேக்’ மோசடியில், குறுஞ்செய்தி அல்லது தகவல் மூலம் எந்த இணைய இணைப்பும் அனுப்பப்படுவதில்லை. அதற்கு பதிலாக, உங்கள் வங்கி கணக்கில் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனை நடந்துள்ளதாக கூறி, உடனடியாக ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு அழைக்குமாறு செய்தி அனுப்பப்படுகிறது. அந்த எண்ணுக்கு அழைத்தவுடன், நேரடியாக மோசடிக்காரர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது.
சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் ஸ்பாம் வடிகட்டிகள் தற்போது அதிகம் திறன் வாய்ந்ததாக மாறியுள்ளதால், குற்றவாளிகள் தங்களின் யுக்திகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாகவே இந்த இணைப்பு இல்லாத அழைப்பு அடிப்படையிலான மோசடி பரவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபடுவோர் தங்களை வங்கிப் பணியாளர்கள், Twint போன்ற பணப்பரிவர்த்தனை செயலி பிரதிநிதிகள் அல்லது வரித் துறை அதிகாரிகள் என நடித்து பேசுகின்றனர். பின்னர் கணக்கை பாதுகாக்க வேண்டும், பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும் என்பதுபோன்ற காரணங்களை கூறி, தனிப்பட்ட விவரங்கள், உள்நுழைவு தகவல்கள் அல்லது உறுதிப்படுத்தல் குறியீடுகளை கேட்கிறார்கள். இவ்வாறு பெறப்படும் தகவல்களை பயன்படுத்தி வங்கி கணக்குகளை ஹேக் செய்வதே இவர்களின் நோக்கம்.
அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கும் அறிவுறுத்தல் என்னவெனில், வங்கிகள் அல்லது அரசு அலுவலகங்கள் தொலைபேசி மூலம் ரகசிய தகவல்களை கேட்காது. சந்தேகமான செய்தி வந்தால் அதில் கொடுக்கப்பட்ட எண்ணுக்கு அழைக்காமல், நேரடியாக உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது வாடிக்கையாளர் சேவை எண்ணை பயன்படுத்தி உறுதிப்படுத்த வேண்டும். சுவிட்சர்லாந்தில் சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், விழிப்புணர்வே மிக முக்கியமான பாதுகாப்பு ஆயுதம் என சைபர் பாதுகாப்பு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.