சுவிட்சர்லாந்தில் கடன் சுமை குறைக்கும் சட்டம்: நாடாளுமன்றத்தில் சூடான விவாதம்
சுவிட்சர்லாந்தில் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிம்மதி தரக்கூடிய புதிய சட்ட முன்மொழிவை இந்த வாரம் நாடாளுமன்றம் விவாதிக்கிறது. நாட்டில் சுமார் 7 இலட்சம் பேர் அதிகப்படியான கடன் சுமையால் போராடி வருகிறார்கள் என்பதே புள்ளிவிவரங்கள் காட்டும் நிலை.
அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டத்தின் படி, கடன் சுமையில் உள்ளவர்கள் மூன்று ஆண்டுகள் குறைந்தபட்ச வாழ்க்கை முறையில் வாழ ஒப்புக்கொண்டால், அவர்களது கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இந்த காலத்தில் புதிய கடன்கள் எடுக்கக்கூடாது; அத்தியாவசிய செலவுகளுக்கு அப்பாற்பட்ட அனைத்தும் கடன் வழங்குநர்களிடம் நேரடியாக செலுத்தப்பட வேண்டும்.
இருப்பினும், சட்ட முன்மொழிவின் மிகப்பெரிய விவாதப்பொருள் – இந்தக் காலவரை. அரசு மூன்று ஆண்டுகளை முன்மொழிந்துள்ளது. ஆனால் சில அரசியல்வாதிகள் ஐந்து ஆண்டுகள் அவசியம் என வலியுறுத்துகின்றனர். அண்டை நாடுகள் முதலில் ஐந்து ஆண்டுகள் விதியை நடைமுறைப்படுத்தியிருந்தாலும், அது மிகவும் கடுமையாக உள்ளதென கருதி பின்னர் மூன்று ஆண்டுகளாகக் குறைத்தன.
இது கடன் வழங்குநர்களுக்கு பாதகமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் சட்டத்திற்கு ஆதரவளிப்போர், கடன்களின் பெரும்பகுதி அரசுக்கே – குறிப்பாக வரி பாக்கி மற்றும் சுகாதார காப்பீடு கட்டணங்களில் நிலுவையாக உள்ளதாகக் கூறுகின்றனர். எனவே, மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக சுயநிறைவு அடையச் செய்வதே அரசுக்கும் சமூகத்துக்கும் நல்லது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
இந்த விவாதம் வருங்காலத்தில் சுவிட்சர்லாந்தின் கடன் தீர்வு முறையை மாற்றக்கூடியதாக இருக்கும் என்பதால், சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
©