பாசல் முதல் ஸ்வீடனின் மால்மோ வரை புதிய இரவு ரயில் – 2026 ஏப்ரலில் சேவை தொடக்கம்
சுவிட்சர்லாந்தின் பாசல் (Basel) நகரத்திலிருந்து ஸ்வீடனின் மால்மோ (Malmö) நகரம் வரை புதிய நேரடி இரவு ரயில் சேவை 2026 ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தால் சேவை ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யூரோநைட் (EuroNight) எனப்படும் இந்த இரவு ரயில் சேவை வாரத்திற்கு மூன்று முறை இரு திசைகளிலும் இயக்கப்படும். வருடம் முழுவதும் இயங்கும் இந்த ரயில், பாசல் நகரத்தை டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் (Copenhagen) மற்றும் ஸ்வீடனின் மால்மோ நகரத்துடன் இணைக்கும். மொத்த பயண தூரம் சுமார் 1,400 கிலோமீட்டராகும்.

பயணத்தில் ஜெர்மனி மற்றும் டென்மார்க் வழியாக பல இடங்களில் ரயில் நின்று செல்லும். மொத்தம் 350 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் ஸ்லீப்பிங் கார்கள், குச்செட் (couchette) வண்டிகள் மற்றும் சாதாரண இருக்கை வண்டிகளும் இடம்பெறும்.
இந்தத் திட்டம் சுவிஸ் கூட்டாட்சி அரசின் CO₂ சட்டத்தின் கீழ் வழங்கப்படும் 47 மில்லியன் ஃப்ராங்க் நிதி ஆதரவை சார்ந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தினை ஊக்குவிக்கும் நோக்கில், விமானப் பயணத்திற்கு மாற்றாக நீண்ட தூர இரவு ரயில்களை மேம்படுத்த சுவிஸ் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
பாராளுமன்றம் இந்நிதி ஒதுக்கீட்டுக்கு இந்த குளிர்காலத்தில் தீர்மானம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டம் நிறைவேற்றப்பட்டால், இது மத்திய ஐரோப்பாவையும் ஸ்காண்டினேவிய நாடுகளையும் இணைக்கும் முக்கியமான இரவு ரயில் பாதைகளில் ஒன்றாக அமையும்.
© WRS