காசா நெருக்கடிக்காக சுவிஸ்ஸின் புதிய உதவி: 23 மில்லியன் ஃபிராங்க் ஒதுக்கீடு
காசாவில் தொடரும் மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க சுவிஸ் அரசு 23 மில்லியன் ஃபிராங்க் கூடுதலாக வழங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்கா முன்வைத்த Gaza Peace Plan முயற்சிக்கு ஆதரவாக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023 அக்டோபரிலிருந்து சுவிஸ்ஸின் மொத்த உதவி ஏற்கனவே 127 மில்லியன் ஃபிராங்கை கடந்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் கூறுகையில், போர் நிறுத்தம் இருந்தாலும் காசாவில் மக்களின் அடிப்படை தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலை தொடர்கிறது. தண்ணீர், உணவு, மருத்துவ சேவைகளுக்கான அணுகல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த புதிய உதவியில் 17.5 மில்லியன் ஃபிராங்க் அவசர நிவாரணத்திற்காக ஒதுக்கப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பிற்காக மட்டும் 5.5 மில்லியன் ஃபிராங்க் ஒதுக்கப்பட்டுள்ளது. UNICEF, WHO மற்றும் Save the Children ஆகியவை கல்வி, மருத்துவம், மனநல ஆதரவு போன்ற திட்டங்களின் மூலம் இதனை பயன்படுத்த உள்ளன.

FIFA-வுடன் இணைந்து 2026ஆம் ஆண்டில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் 10 சிறு கால்பந்து மைதானங்கள் உருவாக்கும் திட்டத்தையும் சுவிஸ் அரசு ஆதரிக்கிறது. முதல் கட்டமாக மேற்கு கரையில் இரண்டு மைதானங்களுக்கு 120,000 ஃபிராங்க் வழங்கப்படுகிறது.
மேலும், மனிதாபிமான உதவி மற்றும் ஆயுதநீக்கம் தொடர்பான நிபுணர்களை சுவிஸ் Civil-Military Coordination Center-க்கு அனுப்பியுள்ளது. காசா பிராந்தியத்தில் நிலையான அமைதி உருவாக்க இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை என காசிஸ் குறிப்பிட்டார்.
காசா போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 13 குழந்தைகள் தற்போது சுவிஸ்ஸுக்கு வருவதை அவர் உறுதிப்படுத்தினார். பாதுகாப்பு காரணங்களால் அவர்கள் எங்கு தங்கவைக்கப்படுவார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
® Keysotonesda