ஐரோப்பிய பல்கலை தரவரிசை: சுவிட்சர்லாந்து முன்னணியை இழந்தாலும் வலுவான நிலை
ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கான சமீபத்திய தரவரிசையில் சுவிட்சர்லாந்தின் உயர்கல்வி அமைப்பு மீண்டும் தன் தரத்தை நிரூபித்துள்ள போதிலும், முழுமையான முதலிடத்தை இம்முறை இழந்துள்ளது. கல்வி ஆலோசனை நிறுவமான Quacquarelli Symonds (QS) வெளியிட்டுள்ள ஐரோப்பிய பல்கலை தரவரிசையின் இரண்டாவது பதிப்பில், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த University of Oxford முதலிடத்தைப் பிடித்து, இதுவரை முதலிடத்தில் இருந்த ETH Zurich-ஐ (சூரிச் – Zurich) இரண்டாவது இடத்திற்குத் தள்ளியுள்ளது.
இந்த தரவரிசையில் லண்டனைச் சேர்ந்த Imperial College London மற்றும் University College London ஆகிய இரு கல்வி நிறுவனங்கள் இணைந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளன. முதலிடம் கைமாறியிருந்தாலும், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய உயர்கல்வி வரைபடத்தில் தன் வலுவான இடத்தைத் தக்க வைத்துள்ளது.
ஐரோப்பாவின் முதல் பத்து பல்கலைக்கழகங்களில் சுவிட்சர்லாந்தில் இருந்து இரண்டு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ETH Zurich இரண்டாவது இடத்தில் தொடரும் நிலையில், EPFL எனப்படும் லௌசான் (Lausanne) பெடரல் பாலிடெக்னிக் நிறுவனம் பத்தாவது இடத்தில் நிலையாக உள்ளது. இந்த முதல் பத்து பட்டியலில் ஏழு பல்கலைக்கழகங்கள் ஐக்கிய இராச்சியத்தையும், ஒன்று பிரான்ஸையும் சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற சுவிஸ் பல்கலைகழகங்களிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. University of Zurich (சூரிச் – Zurich) 34வது இடத்தைப் பெற்றுள்ள நிலையில், University of Geneva (ஜெனீவா – Geneva) ஐந்து இடங்கள் முன்னேறி 48வது இடத்தில், இணை தரவரிசையில், முதல் 50 பட்டியலில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளது. University of Lausanne (லௌசான் – Lausanne) மீண்டும் முதல் 100 பட்டியலுக்குள் நுழைந்து 90வது இடத்தைப் பெற்றுள்ளது.
மொத்தமாக 16 கல்வி நிறுவனங்கள் இந்த QS தரவரிசையில் இடம்பெற்றுள்ளதால், பிரதிநிதித்துவ அடிப்படையில் சுவிட்சர்லாந்து உலகில் 15வது இடத்தில் உள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு பேராசிரியர்கள் விகிதம் என்ற “International Faculty Ratio” குறியீட்டில் சுவிட்சர்லாந்து உலகளவில் மிக உயர்ந்த சராசரி மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இந்த அளவுகோலில் EPFL ஐரோப்பாவில் முதலிடத்திலும், ETH Zurich இரண்டாவது இடத்திலும் உள்ளன. மேலும், Università della Svizzera italiana (USI) நான்காவது இடத்தில் உள்ளது. பேராசிரியர் குழுவின் சர்வதேச தன்மையில், சுவிட்சர்லாந்தின் ஆறு பல்கலைக்கழகங்கள் ஐரோப்பாவின் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளன.
இந்த தரவரிசை, முதலிடம் இழந்திருந்தாலும், சுவிட்சர்லாந்தின் உயர்கல்வி அமைப்பு தரம், சர்வதேச ஈர்ப்பு மற்றும் கல்வித் திறன் ஆகியவற்றில் தொடர்ந்து வலுவாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.