காலை நேர பனி: வழுக்கி விழும் அபாயம் குறித்து எச்சரிக்கை
குளிர்காலத்தில் காலை 6 மணி முதல் 8 மணி வரை சாலைகள் மற்றும் நடைபாதைகள் மிக அதிக ஆபத்தான நிலைக்கு மாறுகின்றன. இந்த நேரத்தில் பெய்யும் மழை, பனி மற்றும் உறைபனி சாலைகளில் படிந்து, தெரியாமலேயே வழுக்கி விழும் சூழலை உருவாக்குகிறது என சுவிட்சர்லாந்தின் விபத்து காப்பீட்டு அமைப்பான Suva (சூ..(f)பா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
Suva வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒவ்வொரு குளிர்காலத்திலும் ஆயிரக்கணக்கானோர், மலை விளையாட்டுகளுடன் தொடர்பில்லாத தினசரி நடமாட்டங்களில் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மட்டும், சுவிட்சர்லாந்தில் 21,000-க்கும் அதிகமான வெளிப்புற விழுந்து காயமடையும் சம்பவங்கள் பதிவாகுகின்றன. இதில் சுமார் பாதி விபத்துகள் பனி மற்றும் உறைபனியால் ஏற்படுகின்றன. வார நாட்களின் காலை நேரங்களில் இருள், அவசரம் மற்றும் இன்னும் சுத்தம் செய்யப்படாத நடைபாதைகள் காரணமாக அபாயம் மேலும் அதிகரிக்கிறது.
இந்த விபத்துகள் சாதாரணமானவை அல்ல. பல சந்தர்ப்பங்களில் காயங்களின் தீவிரம் காரணமாக பல நாட்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை உருவாகிறது. அடிபட்ட காயங்கள், முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் பொதுவாகக் காணப்படுகின்றன. சில நேரங்களில் எலும்பு முறிவுகள் மற்றும் நிரந்தர பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என Suva வலியுறுத்துகிறது. நடை வேகத்தை குறைத்து, சிறிய அடிகளை எடுப்பது, வழுக்காத காலணிகளை அணிவது மற்றும் அவசரத்தை தவிர்ப்பது போன்ற எளிய பழக்கங்கள், கடுமையான விபத்துகளைத் தவிர்க்க உதவும்.
தினசரி சிறிய முன்னெச்சரிக்கைகளும் பாதுகாப்பில் பெரிய பங்கு வகிக்கின்றன. வழுக்காத அடிப்பகுதியுடன், காலுக்கு நன்கு பொருந்தும் காலணிகளை அணிவது மிகவும் அவசியம். பனி அல்லது உறைபனி நிலவும் இடங்களில், காலணிக்கு பொருத்தப்படும் சிறிய கம்பிகள் கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். வீட்டிலிருந்து வேலைக்குச் செல்லும் போதும், அவசரத்தை தவிர்த்து, போதிய நேரத்தை ஒதுக்கிக் கொள்வது முக்கியம்.
படிக்கட்டுகளில், விழும் அபாயம் அதிகமாக இருப்பதால், கைப்பிடியைப் பயன்படுத்துவது தவிர்க்கக் கூடாத ஒன்றாகும். மேலும், வீடு அல்லது கடையின் முன்பாக மணல் அல்லது உப்பு தூவுவதன் மூலம், உறைபனி உருவாவதை குறைக்க ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை வழங்கலாம்.
மிதிவண்டி பயணத்தில் கூடுதல் கவனம் தேவை. வழுக்கும் சாலைகளில் மிதிவண்டியை தள்ளிச் செல்லுவது அல்லது தற்காலிகமாக அதைப் பயன்படுத்தாமல் இருப்பதே பாதுகாப்பானது. குளிர்காலத்தில், எளிய ஆனால் சரியான முடிவுகள், மிகக் கடுமையான விளைவுகளைத் தவிர்க்க உதவும் என்பதே நிபுணர்களின் ஒருமித்த கருத்தாகும்.
© SUVA