2029க்குள் 140 புதிய கிளைகள் திறக்கும் Migros
சுவிட்சர்லாந்தின் முன்னணி சில்லறை வணிகக் குழுமமான “மிக்ரோஸ்”, 2029 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 140 புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக, “மிக்ரோஸ்” கூட்டுறவு சங்கங்களின் பேரமைப்பின் தலைவி Ursula Nold தெரிவித்துள்ளார். Schweiz am Wochenende நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் அண்டை வட்டாரங்களுக்கும் மேலும் அருகில் செல்லவே இந்த விரிவாக்கம் என அவர் கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2 இலட்சம் கூடுதல் குடும்பங்களை “மிக்ரோஸ்” சென்றடைய முடியும் என்றும், வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமே சிறிய அளவிலான கடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க காரணம் என்றும் அவர் விளக்கினார். இன்று பலர் வாராந்திர பெரிய கொள்முதலுக்கு பதிலாக, அடிக்கடி மற்றும் தேவைக்கேற்ப வாங்க விரும்புகிறார்கள் என்றார்.
“மிக்ரோஸ்” தற்போது சுமார் 1,000 காலிப் பணியிடங்களையும், 850 பயிற்சி இடங்களையும் கொண்டுள்ளதாகவும், புதிய கடைகள் மூலம் மேலும் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் உர்சுலா நோல்ட் தெரிவித்தார். கடந்த பணியாளர் குறைப்பில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் மீண்டும் குழுமத்திலேயே பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2025 ஆம் ஆண்டில் விலைக் குறைப்புகள் காரணமாக வருவாய் சற்றே குறைந்தாலும், நடுத்தர காலத்தில் இது வளர்ச்சிக்கும் சந்தைப் பங்கைக் கூட்டவும் உதவும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார். M-Budget வரிசை பொருட்கள் புதிய பொதி வடிவமைப்புடன் வழங்கப்படுகின்றன என்றும், விலையும் தரமும் மாறவில்லை என்றும் அவர் விளக்கினார்.
மேலும், “மிக்ரோஸ்” ஒரு சூப்பர் மார்க்கெட் மட்டுமல்ல என்றும், Digitec Galaxus, Medbase மற்றும் Migros Bank உள்ளிட்ட சேவைகளுடன் கூடிய பரந்த அமைப்பை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.
©20min