A9 நெடுஞ்சாலையில் பாலியல் சிறுபான்மை ஆண்களை குறிவைத்து தாக்கி பணம் பறித்த இருவர் கைது – பரபரப்பு விவரம் வெளியானது!
ஸ்விட்சர்லாந்தில் உள்ள A9 நெடுஞ்சாலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல ஓரிணச்சேர்க்கை ஆண்களை (Homosexual men) குறிவைத்து, தாக்குதல், மிரட்டல், மற்றும் பணப் பறிப்பு நடத்தி வந்ததாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தற்போது மூன்று பெரிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த இரண்டு இளைஞர்கள், 23 மற்றும் 24 வயதுடையவர்கள், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் Ardon ஓய்விடக் கழிப்பறைகளில் ஓரிணச்சேர்க்கை ஆண் போல நடித்து, தொடர்பு கொள்ள வருவோரிடம் திடீரென தாக்குதல் நடத்தி, பின்னர் “போலீசில் புகார் அளிப்போம்” என மிரட்டி, அவர்களிடமிருந்து பணம் பறித்துள்ளனர்.

ஒரு பாதிக்கப்பட்ட நபர் மட்டும் CHF 7,000 வரை பணம் கொடுத்ததாக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் 2022 முதல் 2024 வரை தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன.
இந்த வழக்கில் இருவருக்கும்…
- தாக்குதல் (Assault)
- திருட்டு மற்றும் பணம் பறிப்பு (Theft & Extortion)
- பாலியல் அடிப்படையிலான வெறுப்பை தூண்டுதல் (Incitement to hatred) …போன்ற முக்கிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது:
சிறப்பு விஷயம் என்னவென்றால், இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக புகார் அளிக்கவில்லை என்றாலும், சட்டம் தானாகவே நடவடிக்கை எடுக்கலாம் என்பதாலேயே அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இது போன்ற பாதுகாப்பற்ற சூழல்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பல அடக்குமுறைகள் எதிர்கொள்ளும் பாலியல் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.
@WRS