சுவிட்சர்லாந்தில் பாதுகாப்புக்காக VAT உயர்வு திட்டம்; அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்பு
உக்ரைனை ரஷ்யா ஊடுருவிய சம்பவம், ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் பாதுகாப்பு குறித்த நீண்டகால அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பல நாடுகள் தங்களின் ராணுவ திறன்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் இடம்பெறுகிறது.
பாரம்பரியமாக நடுநிலைக் கொள்கையை பின்பற்றும் சுவிட்சர்லாந்து, தற்போதைய உலக அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தன் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், ராணுவத்தை வலுப்படுத்துவதற்கு பெரும் நிதி தேவைப்படும் நிலையில், அந்த நிதியை எவ்வாறு திரட்டுவது என்பது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.
இதற்கான தீர்வாக, வரிவருவாயை அதிகரிக்கும் திட்டத்தை Federal Council of Switzerland முன்வைத்துள்ளது. குறிப்பாக, மதிப்புக்கூட்டு வரி எனப்படும் VAT வரியை உயர்த்தும் யோசனை அரசின் பரிசீலனையில் உள்ளது. தற்போதைய திட்டத்தின் படி, 2028ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு VAT வரியை 0.8 சதவிகிதம் உயர்த்தலாம் என அரசு முன்மொழிகிறது.

இந்த வரி உயர்வு நடைமுறைக்கு வந்தால், சுவிட்சர்லாந்து அரசுக்கு சுமார் 30 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வருவாயாக கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த தொகை ராணுவப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் நாட்டு பாதுகாப்பு தொடர்பான நீண்டகால திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
ஆனால், சுவிட்சர்லாந்தில் மற்ற சில நாடுகளைப் போல திடீரென வரி உயர்வுகளை அமல்படுத்த முடியாது. எந்த முக்கிய மாற்றத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன், அது மக்களிடம் முன்வைக்கப்பட்டு, பொதுவாக்கெடுப்பின் மூலம் அவர்களின் ஒப்புதலை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், இந்த VAT உயர்வு திட்டமும் இறுதியில் மக்கள் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டியதாகும்.
இதற்கிடையில், இந்த யோசனைக்கு எதிராக அரசியல் வட்டாரங்களில் விவாதம் தீவிரமடைந்துள்ளது. இடதுசாரிகள் மட்டுமல்லாமல், வலதுசாரிகளும் இந்த வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வாழ்க்கைச் செலவுகள் ஏற்கனவே அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள்மீது கூடுதல் வரி சுமையை ஏற்றுவது சரியா என்ற கேள்வி தற்போது சுவிட்சர்லாந்து அரசியலில் மையப் பிரச்சினையாக மாறியுள்ளது.