சொலுத்தூர்ன் நகரில் வாகனங்கள் உடைப்பு; சந்தேக நபர் கைது
சொலுத்தூர்ன் (Solothurn) நகரில் உள்ள ரித்ஹாலே பகுதியில் 2026 பிப்ரவரி 14 ஆம் தேதி அதிகாலை பல வாகனங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு பாதசாரி பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் சொலுத்தூர்ன் நகர காவல்துறையினர் சந்தேகநபரை விரைவாகக் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.
அன்று அதிகாலை 1.15 மணியளவில், ஒரு பெண் சுவிட்சர்லாந்து சொலுத்தூர்ன் கன்டோனல் போலீசாரின் அவசர அழைப்பு மையத்தை தொடர்புகொண்டு, ரித்ஹாலே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் கண்ணாடியை அடித்து உடைக்கும் சம்பவத்தை தாம் நேரில் கண்டதாக தெரிவித்தார். சம்பவத்திற்குப் பின்னர் அந்த நபர் பாசல்டோர் (Baseltor) நோக்கி ஓடிச் சென்றதாகவும் அவர் கூறினார்.

இந்த தகவல் உடனடியாக ரேடியோ மூலம் காவல் துறை ரோந்து குழுக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் சொலுத்தூர்ன் நகர காவல்துறையினர் சந்தேக நபரை தடுத்து நிறுத்தினர். பின்னர் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், ரித்ஹாலே அருகே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
சம்பவ இடத்திலிருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்கள் 32 வயதான அல்ஜீரியாவைச் சேர்ந்த அந்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்காலிகமாக காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் காவல்துறையினர், வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி, சந்தேகத்திற்கிடமான செயல்களை உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். Kapo SO