மாண்ட்ரியக்ஸ் கிறிஸ்துமஸ் சந்தையில் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை
ரிவியேரா நோயல் கிறிஸ்துமஸ் சந்தையின் 2025ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் சந்தைக்கு வந்தவர்களின் எண்ணிக்கையும், அவர்களின் தன்மையும் குறிப்பிடத்தக்க வகையில் மாறியுள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் வயதினர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தது முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
Montreux (மாண்ட்ரியக்ஸ்) நகரத்தின் பண்பாட்டு அடையாளத்துக்கு ஏற்ப, 2025 பதிப்பில் இசை முக்கிய இடத்தைப் பெற்றது. சந்தை நடைபெற்ற காலம் முழுவதும் மொத்தம் 51 இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பிராந்திய மக்கள் இசை, இசைப் பள்ளிகளின் நிகழ்ச்சிகள், ஜாஸ், பாப்-ராக், கோஸ்பல் பாடல்கள் மற்றும் டிஜே நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதன் மூலம் பல்வேறு வயதினரையும், பல்வேறு நாட்டினரையும் கவரும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிவியேரா நோயல் என்ற புதிய ஒருங்கிணைந்த கருத்துத் திட்டத்தின் கீழ், Vevey, Villeneuve மற்றும் மான்றூ ஆகிய மூன்று நகரங்களும் இணைந்து இந்த சந்தையை நடத்துகின்றன. கடந்த நவம்பர் 20ஆம் தேதி முதல், இந்த மூன்று நகரங்களிலும் 200க்கும் மேற்பட்ட மரச் சாலேட் கடைகள் அமைக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் சூழலை உருவாக்கின.
கடந்த ஆண்டு மட்டும் சுமார் 5.5 இலட்சம் பேர் இந்த சந்தையைப் பார்வையிட்டதாக அதிகாரப்பூர்வ கணக்கில் தெரியவந்துள்ளது. 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மான்றூ நோயல் சந்தை, இன்று ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான மற்றும் அடையாளமான கிறிஸ்துமஸ் சந்தைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நீண்ட வரலாறும், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் புதுமைகளும், ரிவியேரா நோயலை உலகளாவிய சுற்றுலா நிகழ்வாக மாற்றியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.