சொலுத்தூர்னில் (Solothurn) குழந்தைகள் மையத்தில் உட்புகுந்த நபர் கைது
சுவிட்சர்லாந்தின் Solothurn நகரில் உள்ள ஒரு குழந்தைகள் மையத்தில் (Kindergarten) உட்புகுந்ததாக சந்தேகிக்கப்படும் 31 வயதுடைய சுவிஸ் குடியுரிமை கொண்ட நபரை, கன்டோனல் மற்றும் நகர காவல் துறையினர் சனிக்கிழமை மதிய வேளையில் கைது செய்துள்ளனர்.
ஜனவரி 17, 2026 அன்று மதியத்திற்கு சற்று முன், சொலுத்தூர்ன் நகரின் ஆல்மெண்ட் வீதியில் அமைந்துள்ள குழந்தைகள் மையத்தில் உட்புகுந்து திருட்டு நடந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சொலுத்தூர்ன் கன்டோனல் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் காவல் துறையினர் அங்கு வந்தபோது, குறித்த நபர் ஏற்கனவே அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தார்.

இதையடுத்து, பல காவல் படைகள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தன. குறுகிய நேரத்திலேயே, அந்த குழந்தைகள் மையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் ஒரு 31 வயதுடைய சுவிஸ் நபர் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்யப்பட்டார். அவரிடம் உட்புகுந்து திருட பயன்படுத்தப்படும் கருவிகளும், குறித்த குழந்தைகள் மையத்திலிருந்து திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
மேலதிக விசாரணைகளுக்காக அந்த நபர் தற்காலிகமாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், அவர் இதற்கு முன்னரும் இதுபோன்ற சொத்துச் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மூலம்: சொலுத்தூர்ன் கன்டோனல் போலீசார்