சாஃப்ஹவுசனில் சோகம் : கால்பந்து விளையாடிய சிறுமி மயங்கி விழுந்து மரணம்
சுவிட்சர்லாந்தின் சாஃப்ஹவுசன் நகரில் சனிக்கிழமை, அக்டோபர் 25ஆம் தேதி, 13 வயது சிறுமி ஒருவர் பெண்கள் இளம் பிரிவு கால்பந்து போட்டியின் போது திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்த துயரச்சம்பவம் நடைபெற்றது. ஸ்போர்ட்டிங் கிளப் சாஃப்ஹவுசனுக்காக விளையாடி வந்த அந்த சிறுமி, போட்டி நடந்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மைதானத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற அவசர உதவி குழுவினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டபோதும், அந்த சிறுமியை காப்பாற்ற முடியவில்லை.
அந்த அணியின் இணைத் தலைவர் ஊடகத்திடம் கூறியதாவது: “அவள் விளையாடிக் கொண்டிருந்தபோது உடல் நலம் சரியில்லை என்று கூறினாள். அதனால் அவளை வெளியே அனுப்பினோம். ஆடை மாற்றும் அறைக்குச் செல்லும் வழியிலேயே, கோல் போஸ்ட்டிற்கு அருகில் சில அடிகள் நடந்தவுடன் தரையில் விழுந்துவிட்டாள்,” என்றார்.
உள்ளூர் அதிகாரிகள் சம்பவம் குறித்து உறுதிப்படுத்தியிருந்தாலும், சிறுமியின் அடையாளம் மற்றும் மருத்துவத் தகவல்கள் குறித்து கூடுதல் விவரங்களை வெளியிட மறுத்துள்ளனர்.

அந்த சிறுமி படித்த பள்ளியின் நிர்வாகம், “இது எங்கள் பள்ளி சமூகத்துக்கே மிகப் பெரிய அதிர்ச்சியாக உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆதரவு வழங்க சமூக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்தச் சிறுமி சேர்ந்திருந்த ஸ்போர்ட்டிங் கிளப்பும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) ஒரு நினைவஞ்சலி நிகழ்வை நடத்தி துயரத்தை வெளிப்படுத்தியது.
அணியின் தலைவர் கூறியதாவது: “எங்களிடம் இளம் பெண்களுக்கான ஒரு கால்பந்து அணி உருவாகியது அவளால்தான். ஒருநாள் அவளது தாய் என்னை தொடர்பு கொண்டு, ‘என் மகள் கால்பந்து விளையாட விரும்புகிறாள்’ என்றார். அதற்கு நான், ‘அம்மா, இன்னும் 15 பெண்களை கூட்டி வாருங்கள், நாங்கள் ஒரு அணியை உருவாக்குவோம்’ என்றேன். அந்தச் சொல் நிஜமாகி விட்டது,” என்று உணர்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த அந்தச் சிறுமியின் இறுதிச்சடங்கு சாஃப்ஹவுசனில் உள்ள மசூதியில் நடைபெற்றது. பிரார்த்தனைக்குப் பிறகு அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் சமூகத்தையும் விளையாட்டு உலகத்தையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
© 20 Minuten