லுஃப்தான்சா குழுமம் தனது விமான சேவை வலையமைப்பில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது
லுஃப்தான்சா குழுமம் தனது விமான சேவை வலையமைப்பில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. குறுகிய மற்றும் நடுத்தர தூர விமான பாதைகள் இனி நேரடியாக குழும தலைமையகத்தில் இருந்து ஒருங்கிணைக்கப்படும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுவரை நீண்ட தூர விமான வலையமைப்பே மையமாக நிர்வகிக்கப்பட்டது.
முக்கிய குறிக்கோள்: சந்தை நிலை மற்றும் இலாபத்தை வலுப்படுத்தல்
இந்த மாற்றம், குழுமத்தின் முக்கிய ஹப் எயார்லைன்கள் ஆகிய Lufthansa, Austrian Airlines, Brussels Airlines மற்றும் SWISS ஆகியவற்றை பாதிக்கும். சந்தை நிலையை வலுப்படுத்தி, வேகமான முடிவுகள் எடுப்பதும், சேவைகளை ஒருங்கிணைப்பதும், திறன் மற்றும் இலாபத்தை அதிகரிப்பதும் இந்த மறுசீரமைப்பின் பிரதான நோக்கம் என நிறுவனம் கூறியுள்ளது.

பல துறைகள் மையப்படுத்தப்படுகின்றன
வலையமைப்பு திட்டமிடல் மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், நிதி, மனிதவள மேலாண்மை, Miles & More போன்ற வாடிக்கையாளர் நம்பிக்கை திட்டங்கள் ஆகியவை “Group Function Boards” எனப்படும் குழுக்களின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இதில் குழும நிர்வாகிகளும், தனித்தனி எயார்லைன் பிரதிநிதிகளும் இணைந்து செயல்படுவார்கள். இந்த மாற்றங்கள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
சுவிஸ் எயார்லைன்ஸ் CEO விளக்கம்
சுவிஸ் எயார்லைன்ஸ் தலைமை நிர்வாகி Jens Fehlinger, சூரிச் நகரம் தன் முக்கியத்துவத்தை இழக்கிறது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். பயணிகள் சேவை, உணவுகள், மற்றும் விமானப் பயண அனுபவம் போன்ற வாடிக்கையாளர் தொடர்பான அம்சங்கள் தனித்தனி எயார்லைன்களின் கட்டுப்பாட்டில் தொடரும். அதேபோல, விமான இயக்க மேலாண்மை (Flight Operations) ஒவ்வொரு ஹப் எயார்லைன்களிடமே இருக்கும் என குழுமம் உறுதிப்படுத்தியுள்ளது.
© Keystone-SDA