வலைஸ் கன்டோனில் செம்பு திருட்டு வழக்கில் ஆறு பேர் மீது நடவடிக்கை
2024 ஆம் ஆண்டு இறுதிக்காலத்தில் வலைஸ் கன்டோனில் செம்பு சேமித்து வைத்திருந்த நிறுவனங்களை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்ததாக போலீசார் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக செம்பு போன்ற உலோகங்களின் சர்வதேச சந்தை விலை உயர்வு காரணமாக, இத்தகைய திருட்டுகள் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில், Kantonspolizei Wallis மாநில வழக்கறிஞர் அலுவலகத்தின் வழிநடத்தலில் விரிவான விசாரணையை முன்னெடுத்தது. 2024 செப்டம்பர் தொடக்கம் டிசம்பர் இறுதி வரை, செம்பு கையிருப்பில் வைத்திருந்த பல நிறுவனங்களில் கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் பதிவாகின.
2024 டிசம்பர் 30 ஆம் தேதி, சியோன் (Sitten) நகரில் இடம்பெற்ற ஒரு கொள்ளைச் சம்பவத்தின் போது, இரண்டு சந்தேக நபர்கள் களவாடும் வேளையில் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மொத்தம் ஆறு சந்தேகநபர்கள் ஆறு தனித்தனி திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த கொள்ளைச் சம்பவங்களால் ஏற்பட்ட மொத்த நஷ்டம் 2 இலட்சத்து 30 ஆயிரம் சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சியோன், கான்தே (Conthey), கிராஞ்ச் (Granges), மார்டினி (Martinach) மற்றும் வொல்லேஜ் (Vollèges) ஆகிய பகுதிகளில் இவர்கள் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அனைவரும் ருமேனிய பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 40 வயதுடையவர்கள் இருவர், 28 வயதுடையவர்கள் இருவர், 51 வயதுடைய ஒருவர் மற்றும் 26 வயதுடைய ஒருவர் அடங்குவர். இவர்கள்மீது மாநில வழக்கறிஞர் அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது சட்டநடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர்களாக கருதப்படும் என்ற சட்டக் கொள்கை நடைமுறையில் இருப்பதும் நினைவூட்டப்பட்டுள்ளது.
வலைஸ் கன்டோனில் செம்பு திருட்டு, தொழிற்சாலை கொள்ளை, நிறுவன பாதுகாப்பு குறைபாடு போன்ற விவகாரங்கள் குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. நிறுவனங்களுக்கு இலவச பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்க தயாராக இருப்பதாக வலைஸ் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர். கோரிக்கை விடுத்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் ஆலோசனைகளை வழங்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.