Ikea விலை காட்டும் முறையில் சர்ச்சை: அதிகாரிகள் தலையீடு
சுவிட்சர்லாந்தில் செயல்படும் IKEA நிறுவனம், பொருட்களின் விலைகளை காட்டும் விதத்தில் நுகர்வோர் உரிமை அமைப்புகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நிறுவனம் தனது விலை காட்டும் முறையில் மாற்றம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, “Family Price” எனப்படும் உறுப்பினர் விலை மிகவும் பெரியதாகவும் தெளிவாகவும் காட்டப்பட்ட நிலையில், பொதுவான விலை சிறியதாகவும் தெளிவில்லாத வகையிலும் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த “Family Price” என்பது உறுப்பினர் அட்டையை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் விலை என்பதால், பல வாடிக்கையாளர்கள் தவறாக புரிந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் மொழிப் பகுதிகளில் செயல்படும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் இந்த பிரச்சினையை State Secretariat for Economic Affairs கவனத்திற்கு கொண்டு சென்றன. இதையடுத்து அதிகாரிகள் தலையீடு செய்து, விலை வெளிப்படுத்தும் முறைகள் சட்டத்திற்கேற்ப இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

கடையில் பணிபுரியும் சில ஊழியர்களும், பல வாடிக்கையாளர்கள் checkout-இல் செலுத்த வேண்டிய தொகை எதிர்பார்த்ததை விட பல நூறு ஃப்ராங்குகள் அதிகமாக இருந்ததாக புகார் தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக Ikea நிறுவனம், அதிகாரிகளுடன் இணைந்து சட்டத்திற்கு ஏற்ப பொருந்தும் தீர்வை உருவாக்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது. நுகர்வோர் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை ஆகியவை முக்கியம் என்பதால், இந்த மாற்றம் அவசியம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.