இலங்கையில் மோதல் தொடர்பான பாலியல் வன்முறை: நீதி இன்னும் மறுக்கப்படுகிறது – ஐ.நா. அறிக்கை எச்சரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று, இலங்கையில் 2009இல் முடிவடைந்த உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் திட்டமிடப்பட்டவையாகவும் பரவலானவையாகவும் இருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பான முழுமையான அறிக்கை அடங்கிய விரிவான செய்தியை நாம் எமது இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். ஆனால் பல ஊடகங்கள் இந்த முக்கியமான அறிக்கை தொடர்பில் பேசாமல் இருப்பது எமது தமிழ் சமூகத்திற்குள் இருக்கும் ஒரு கசப்பான உண்மையாக பார்க்கப்படுகிறது. இன்றைய இந்த வீடியோ அந்த அறிக்கை பற்றிய முக்கிய விடயத்தை சுருக்கமாக சொல்லவிருக்கிறது. உண்மையில் ஈழத்தமிழர் தலையில் தூக்கி கொண்டாடவேண்டிய ஒரு செய்தி இது என்றெ சொல்லலாம். எனவே இதுவரையில் இந்த செய்தி தெரியாமல் இருப்பவர்கள் தயவுசெய்து பகிருங்கள்.
“நாங்கள் எல்லாவற்றையுமே இழந்துவிட்டோம் – நீதி பெறும் நம்பிக்கையினையும் கூட” என்ற தலைப்பிலான இந்தக் குறிப்பு, ஆண்களும் பெண்களுமான உயிர்பிழைத்தோருக்கு நீதி இன்னும் மறுக்கப்பட்டுள்ளதாகவும், தண்டனையின்மை கலாசாரம் தொடர்வதாகவும் வலியுறுத்துகிறது.
ஒரு தசாப்த கால கண்காணிப்பு, விசாரணைகள் மற்றும் உயிர்பிழைத்தோருடனான ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கை, போர்க்காலத்தில் அரச படைகள் உள்ளிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட வன்புணர்வு, பாலியல் சிதைவு, கட்டாய நிர்வாணம், பாலியல் அவமானம் போன்ற கொடூரச் செயல்கள் நீடித்த அதிர்ச்சியை ஏற்படுத்தவும் சமூகங்களை உடைக்கவும் நோக்கமுடையவையாக இருந்ததாகக் கூறுகிறது. ஒரு உயிர்பிழைத்தோர் கூறியதாக அறிக்கையில் மேற்கோளிடப்பட்டுள்ளது: “பாலியல் வன்முறை என்பது ஒருபோதும் நிற்காத சித்திரவதை.”

போருக்குப் பின்னரும் இராணுவமயமாக்கல் மற்றும் அவசரகால சட்டங்கள் காரணமாக பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்ந்து பதிவாகியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உயிர்பிழைத்தோர் நாள்பட்ட உடல் காயங்கள், கருவழிப்பு, உளவியல் பாதிப்புகள், தற்கொலை எண்ணங்கள் ஆகியவற்றால் துன்புறுவதுடன், கண்காணிப்பு, அச்சுறுத்தல், துன்புறுத்தல் காரணமாக புகாரளிப்பது குறைவாகவே உள்ளது. களங்கம் குடும்பங்களுக்கும் பரவியுள்ளதுடன், வன்புணர்வால் பிறந்த குழந்தைகள் பாகுபாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
அறிக்கை, இலங்கை அரசு உடனடியாக கடந்தகால பாலியல் வன்முறையை பகிரங்கமாக அங்கீகரித்து முறையான மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும், பாதுகாப்புத் துறை, நீதித்துறை மற்றும் சட்டகத்தில் உயிர்பிழைத்தோரை மையப்படுத்திய சீர்திருத்தங்கள், சுயாதீன வழக்குத் தொடரல் அலுவலகம் அமைத்தல், உளவியல் மற்றும் சமூக ஆதரவு வழங்கல் ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் கூறுகையில், “அங்கீகாரம், உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் இழப்பீடுகள் உயிர்பிழைத்தோரின் கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கும், இலங்கையில் நல்லிணக்கத்தையும் குணப்படுத்தலையும் முன்னேற்றுவதற்கும் முக்கியமானவை” என்றார்.
இலங்கை அரசு உள்நாட்டு பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தங்களுக்கு உறுதியளித்த போதிலும், இதுவரை கணிசமான முன்னேற்றம் இல்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சர்வதேச சமூகமும் இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாமலும் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்த நிலையிலும் எமக்கு எதிரான இலங்கை அரசின் பல்வேறு நாசகார வேலைகளுக்கான நீதிகள் மறுக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இந்த விடயத்தில் இதுவரை காலமும் ஐ.நா மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலும் இறுதி களமுனையில் நின்றுவந்த போராளிகளின் சாட்சிகளின் அடிப்படையிலும் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டிருக்கின்றமை போராளிகளும் ஈழத்தமிழர்களுக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இந்தச்செய்தி நிச்சயம் எம்மண்ணுக்காக மடிந்த மாவீரர்களது ஆத்மாக்களை நிச்சயம் சந்தோசப்படுத்தும் என நம்புவோம்.