டாவோஸ்மாநாட்டில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை – காய் பார்மலின்
டாவோஸில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மன்றமான World Economic Forum (WEF) மாநாட்டில், அமெரிக்க அதிபர் Donald Trump உடன் சுங்க வரிகள் அல்லது மருந்து விலைகள் தொடர்பாக எந்தவிதமான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகளும் நடைபெறாது என்று, சுவிட்சர்லாந்தின் 2026 ஆம் ஆண்டுக்கான கூட்டாட்சி தலைவர் Guy Parmelin தெரிவித்துள்ளார்.
SonntagsZeitung நாளிதழுக்கு அளித்த பேட்டியில், டிரம்ப் இந்த மாநாட்டை தனது கருத்துகளை வெளிப்படுத்தும் மேடையாக பயன்படுத்தவுள்ளதாகவும், பல நாட்டுத் தலைவர்களை சந்திக்கவுள்ளதாகவும் பார்மலின் கூறினார். இரு தரப்பினரும் உரையாட வாய்ப்பு இருந்தாலும், டாவோஸில் அமெரிக்கா–சுவிட்சர்லாந்து இடையே நேரடி பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அதேசமயம், சுங்க வரிகள் தொடர்பான கட்டாய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த அடுத்த கட்டத்திற்கு செல்ல சுவிட்சர்லாந்து தயாராக இருப்பதாக அமெரிக்காவுக்கு தெரிவிக்க முடியும் என்றார்.

மருந்து விலைகள் குறித்து, சில மருந்து நிறுவனங்கள் அமெரிக்க அரசுடன் செய்துள்ள ஒப்பந்தங்கள், சுவிட்சர்லாந்து–அமெரிக்கா இடையேயான அரசியல் புரிந்துணர்வு ஆவணத்துடன் தொடர்பற்றவை என்றும் அவர் விளக்கினார். தற்போது மருந்துகளுக்கு சுங்கவரி பூஜ்ஜியமாக உள்ள நிலையில், அதிகபட்சமாக 15 சதவீதம் வரை பொதுச் சுங்க வரி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்நாட்டில், மருந்துத் துறைக்கான சூழலை மேம்படுத்தவும், அதே நேரத்தில் சுகாதாரச் செலவுகள் உயராமல் இருக்கவும் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக பார்மலின் கூறினார். மேலும், ஜூன் மாதத்தில் வாக்கெடுப்புக்கு வர உள்ள குடியேற்றக் கட்டுப்பாட்டு முன்மொழிவு பொருளாதாரத்திற்கு ஆபத்தானது என்றும், அதற்கு கூட்டாட்சி அரசு எதிராக செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் உள்ள உறவுகளில் தொடர்ச்சியும் நிலைத்தன்மையும் தான் சுவிட்சர்லாந்தின் இலக்கு எனவும் அவர் வலியுறுத்தினார்.
© KeystoneSDA