ஜெனீவா ஏரியில் முதல் உலகப்போரின் பீரங்கிக் குண்டு கண்டுபிடிப்பு – பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது
ஜெனீவாவில் உள்ள பிரபலமான “பான்த் தீ பக்கீ” (Bains des Pâquis) நீச்சல் பகுதியின் அருகே நீர்மூழ்கிகள் மேற்கொண்ட வழக்கமான பணிகளின் போது ஆச்சரியமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது முதல் உலகப்போரின் காலத்தைச் சேர்ந்த பீரங்கிக் குண்டு என பின்னர் உறுதி செய்யப்பட்டது.
இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டதும், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதியை சுமார் 45 நிமிடங்களுக்கு முழுமையாக காலி செய்தது. வெடிகுண்டு நீக்க நிபுணர்கள் குழு சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். விசாரணையில், அந்தக் குண்டு காலியானது என்றும் எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இது போன்ற பொருட்கள் லேக் ஜெனீவா பகுதியில் இன்னும் காணப்படுவது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் அல்ல என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

முதல் உலகப்போருக்குப் பிறகு, 1960கள் வரை ஆயிரக்கணக்கான டன் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் ஏரிக்குள் கொட்டப்பட்டன. அப்போதைய நடைமுறையின்படி பயன்படுத்த முடியாத அல்லது மீதமிருந்த வெடிமருந்துகள் நீரில் மூழ்கடிக்கப்பட்டன. இதன் விளைவாக, இன்றும் சில நேரங்களில் பழைய குண்டுகள் அல்லது ஆயுதங்கள் ஏரியின் அடியில் இருந்து வெளிப்படுவது வழக்கமானதாகவே உள்ளது.
ஜெனீவா அதிகாரிகள் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் ஏற்படும் போது குடிமக்கள் தாமாகவே பொருளை தொடாமல் உடனடியாக காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என மீண்டும் நினைவூட்டியுள்ளனர்.