ஓஸ்டர்முண்டிகனில் தமிழர் மீது நகை கொள்ளை: சுவிட்சர்லாந்து வாழ் தமிழர்களுக்கு அவசர எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் தமிழ் சமூகத்தை இலக்கு வைத்து நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பெர்ன் கன்டோனில் உள்ள Ostermundigen பகுதியில் இடம்பெற்ற சமீபத்திய சம்பவம் தமிழ் சமூகத்தில் கவலை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 25ஆம் தேதி பிற்பகல், அந்த பகுதியில் வசிக்கும் ஈழத் தமிழர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெர்மன் இலக்கத் தகடு கொண்ட Mercedes-Benz கார் ஒன்று அருகில் நின்று, ஒரு முகவரியை பற்றி விசாரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர் அதற்கு பெரிதாக பதிலளிக்காமல் தனது வழியில் சென்றுள்ளார்.
ஆனால், அந்த வாகனத்தில் இருந்தவர்கள் அவரை தொடர்ந்து சென்று உதவி கோரியதாக கூறப்படுகிறது. வாகனத்தில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் இருந்துள்ளனர். திடீரென காரிலிருந்து இறங்கிய ஒரு பெண், பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். தப்பிக்க முயன்றபோதும், அந்த பெண் சங்கிலியை அறுத்து அவரை கீழே தள்ளிவிட்டு வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வாகனத்தின் புகைப்படத்தை எடுக்க முடியவில்லை என கூறியுள்ளார். பின்னர் தன்னை சுதாரித்துக்கொண்டு படம் எடுக்க முயன்றபோது, கார் அருகிலுள்ள குறுக்கு வீதியில் மறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஜெர்மன் பதிவு எண் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், சுமார் 15 நிமிடங்களில் பொலிஸார் அவரது இல்லத்திற்கு வந்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டதுடன், சந்தேக வாகனங்களை அடையாளம் காண சில புகைப்படங்களும் காண்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். காப்புறுதி மூலம் இழப்பீடு பெற முடியும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தனது மனைவியால் பரிசாக வழங்கப்பட்ட தங்கச் சங்கிலியே இவ்வாறு பறிக்கப்பட்டதாக அவர் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

சுவிட்சர்லாந்து பொருளாதார ரீதியாக வலுவான நாடாக இருப்பதால் அண்டை நாடுகளிலிருந்து பலர் தொழில் வாய்ப்புகளுக்காக தினசரி வருகை தருகின்றனர். பெரும்பாலானோர் வாகனங்களில் பயணம் செய்கிறார்கள். இந்த பின்னணியில் சிலர் திட்டமிட்டு கொள்ளை மற்றும் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதற்காக எல்லை தாண்டி வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் முன்பே எச்சரித்துள்ளன. கடந்த காலங்களில் ATM இயந்திரங்கள் உள்ளிட்ட வங்கி கொள்ளைச் சம்பவங்களிலும் வெளிநாட்டு கும்பல்கள் தொடர்புடையதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தின் Aarau மற்றும் சொலுத்தூர்ன் (Solothurn) கன்டோன் பகுதிகளிலும் நகை பறிப்பு சம்பவங்கள் குறித்து முன்பே முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வெளிநாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்களில் வரும் அந்நியர்களுடன் அவதானமின்றி தொடர்பு கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக அதிக தங்க ஆபரணங்களை அணிந்து தனியாக நடந்து செல்லும் போது கூடுதல் எச்சரிக்கை அவசியம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் கலாச்சார ரீதியாக தங்க நகைகள் அணியும் பழக்கம் அதிகமாக இருந்தாலும், சுவிட்சர்லாந்தில் பொதுவிடங்களில் அவற்றை வெளிப்படையாக அணிவது சில நேரங்களில் ஆபத்தாக மாறக்கூடும். எனவே தமிழ் சமூகத்தினர் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும் என்பதே இந்த அனுபவப் பகிர்வின் முக்கிய நோக்கமாகும்.
எச்சரிக்கையுடன் இருப்பதும், சந்தேகத்திற்கிடமான சம்பவங்களை உடனடியாக பொலிஸாரிடம் தெரிவிப்பதும், இத்தகைய குற்றங்களைத் தடுக்க உதவும் என்பது வலியுறுத்தப்படுகிறது.