சுவிட்சர்லாந்தில் அதிகரித்து செல்லும் மக்கள் தொகையால் சில முக்கிய நகரங்களில் குடியிருப்பாளர்களுக்குரிய குடியிருப்பு பற்றாக்குறை அண்மை காலமாக நிலவிவருகின்றது.
முக்கியமாக சூரிச் நகரத்தில் குறித்த பிரச்சினை அதிகரிப்பதாக அண்மைய நாட்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப்பிரச்சினைக்கு தீர்வுகளை எட்டும் முயற்சியில் சுவிட்சர்லாந்தின் அரசியல் வாதிகள் புதிய திட்டம் ஒன்றை குறிப்பிடுகிறார்கள்.
நிலவி வரும் நிலப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு குடியிருப்பு கட்டிடங்கள் புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள். அதாவது அதிகளவான அடுக்குமாடிக்குடியிருப்புகள் அமைக்கப்படவேண்டும் என்கிறார்கள்.
நாட்டின் நீண்டகால வீட்டுப் பற்றாக்குறையைத் தீர்க்கும் முயற்சியில், குறிப்பாக புதிய கட்டுமானத்திற்கான நிலப்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, லிபரல்-ரேடிகல் கட்சி இந்த அழுத்தத்தை சுவிட்சர்லாந்து அரசுக்கு கொடுத்துவருகின்றது.
இருக்கும் பழமையடைந்த தனி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அதில் பல அடுக்குமாடிக்குடியிருப்புகளை கட்டுவதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொதுவாக மண்டல விதிமுறைகள் மற்றும் நகரவிதிகளுக்கு அமைவாக குறிப்பிட்ட உயரம் அளவுக்கே கட்டிடங்கள் அமைக்க முடியும். எனவே குடியிருப்பு பற்றாக்குறை காணப்படும் மண்டலங்கள் அதன் விதிமுறைகளை மாற்றி மேலும் ஒன்று அல்லது இரண்டு தளங்கள் மேலதிகமாக அமைப்பதற்கான முடிவை வழங்க வேண்டும் எனவும் ஒரு கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் தற்போதுள்ள கட்டிடங்களின் அதிகபட்ச அங்கீகரிக்கப்பட்ட உயரத்தை குறைந்தது மூன்று மீட்டர் அதிகரிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.