ரயில் நிலையங்களில் இ-சிகரெட் கட்டுப்பாட்டுக்கு கோரிக்கை
சுவிட்சர்லாந்தில் ரயில் நிலைய தளங்களில் இ-சிகரெட் (vaping) பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என புகையிலை தடுப்பு அமைப்புகள் வலியுறுத்துகின்றன. தற்போது SBB நிர்வகிக்கும் ரயில் நிலையங்களில், புகைபிடித்தல் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாம்பல் தொட்டிகளைச் சுற்றியுள்ள இரண்டு மீட்டர் பரப்பளவில் மட்டுமே புகைபிடிக்க அனுமதி உள்ளது. இதே விதிமுறைகள் மின்சிகரெட் பயன்படுத்துபவர்களுக்கும் பொருந்துகின்றன.
இருப்பினும், Swiss Association for Tobacco Prevention தெரிவித்ததாவது, பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக, நியமிக்கப்பட்ட பகுதிகளை மீறி ரயில் தளங்களின் பல இடங்களிலும், சில நேரங்களில் ரயில்களின் உள்ளேயும் இ-சிகரெட் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், இந்த விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என அந்த அமைப்பு SBBயிடம் கோரிக்கை வைத்துள்ளது. விதிகளை மீறுபவர்களுக்கு 500 சுவிஸ் ஃப்ராங்க் அபராதம் விதிப்பது பொருத்தமானது என அமைப்பின் இயக்குநர் Luciano Ruggia தெரிவித்துள்ளார்.

மேலும், புகைபிடித்தலைத் தடைசெய்யும் அடையாளங்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும், பாரம்பரிய சிகரெட் மட்டுமன்றி மின்சிகரெட் குறியீடுகளும் அதில் இடம்பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புகைபிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தரையில் அடையாளங்கள் அமைப்பதும் அவசியம் எனவும் அவர் கூறுகிறார்.
இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், பலர் விதிகளை மதிக்காமல் தொடர்ந்தும் புகைபிடிப்பார்கள் என்ற கவலைவும் வெளியிடப்பட்டுள்ளது. பயணிகளின் நலன் மற்றும் பொதுப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த விவகாரம் குறித்து விரைவில் தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.