சுவிட்சர்லாந்தில் ரோமான்ஷ் மற்றும் இத்தாலிய மொழிகளுக்கு புதிய ஊக்குவிப்பு திட்டம்
சுவிட்சர்லாந்து கூட்டாட்சி அரசு, நாட்டின் சிறுபான்மை தேசிய மொழிகளாக கருதப்படும் ரோமான்ஷ் மற்றும் இத்தாலிய மொழிகளின் பயன்பாட்டை, அவை வழக்கமாகப் பேசப்படும் பகுதிகளைத் தாண்டி, நாட்டின் பிற பிராந்தியங்களிலும் விரிவாக்க முடிவு செய்துள்ளது.
கிரௌவூன்டன் (Graubünden) மாகாணத்தில் பெரும்பாலும் ரோமான்ஷ் மொழி பேசப்படுகின்றது; டிசினோ (Ticino) மாகாணம் இத்தாலிய மொழியின் மையமாக விளங்குகிறது. இப்போது இந்த இரு மொழிகளும் நாட்டின் பிற பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, கலாச்சார மற்றும் மொழியியல் பல்தன்மையை வலுப்படுத்த அரசு முயற்சி மேற்கொள்கிறது.
புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கூட்டாட்சி அமைச்சர்கள் இதற்கான சட்ட திருத்தத்தை ஒப்புதல் அளித்ததாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், நாட்டின் கல்வி, கலாச்சாரம் மற்றும் அரசு நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் ரோமான்ஷ் மற்றும் இத்தாலிய மொழிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மேலும், கூட்டாட்சி நிர்வாகத்தில் பல மொழிக் குழுக்களின் பிரதிநிதித்துவமும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளைத் தாண்டி, சுவிட்சர்லாந்தின் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளிலும் சமநிலை பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
சுவிட்சர்லாந்து அரசு, நீண்ட காலமாக பலமொழி கலாச்சாரத்தை அதன் தேசிய அடையாளத்தின் முக்கிய அங்கமாகக் கருதுகிறது. ரோமான்ஷ் மொழி தற்போது மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக பேசப்பட்டாலும், அது சுவிட்சர்லாந்தின் பாரம்பரியத்தையும் கலாச்சார பல்வகைத்தன்மையையும் பிரதிபலிக்கும் முக்கியமான மொழியாக மதிக்கப்படுகிறது.
அரசின் இந்த முடிவு, சிறுபான்மை மொழிகளைப் பாதுகாக்கும் முயற்சிக்கும், அவற்றை அடுத்த தலைமுறைகளுக்கு பரிமாறும் பணிக்கும் ஒரு புதிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
© KeystoneSDA