சுவிஸ் மக்களை எதிர்கால தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க அரசு புதிய நடவடிக்கைகள்
கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சுவிட்சர்லாந்து மக்களை எதிர்கால சுகாதார அவசர நிலைகளிலிருந்து சிறப்பாகக் காப்பாற்றுவதற்கான விரிவான திட்டத்தை சுவிட்சர்லாந்து கூட்டாட்சி அரசு (Federal Council) அறிவித்துள்ளது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், எதிர்கால தொற்றுநோய்கள் மற்றும் சுகாதார சவால்களைத் தடுக்கவும், சமாளிக்கவும் தேவையான பல புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட திருத்தம் மற்றும் புதிய ஏற்பாடுகள்
இந்நிலையில், Epidemics Act (தொற்றுநோய்கள் சட்டம்) திருத்தப்பட உள்ளதாகவும், இதன் மூலம் கூட்டாட்சிப் அரசு மற்றும் மாநில அதிகாரிகள் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பரவும் நோய்கள் மற்றும் ஆண்டிபயாடிக் மருந்து எதிர்ப்புத் தன்மை (antibiotic resistance) போன்ற ஆபத்துகளை இணைந்து சமாளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கோவிட்-19 காலத்தில் ஏற்பட்ட சவால்களை முன்னிட்டு, எதிர்காலத்தில் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களைத் தெளிவாகப் பிரித்து அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது என்று கூட்டாட்சி அரசு தெரிவித்துள்ளது.
தேசிய அளவிலான அதிகாரம்
எதிர்காலத்தில் பெருந்தொற்று நிலைமை உருவானால், மாநிலங்களுக்கு பதிலாக கூட்டாட்சிப் அரசே நாடு முழுவதும் ஒரே மாதிரியான உத்தரவுகளை வழங்கும் அதிகாரம் பெறும்.
உதாரணமாக, பொதுப் போக்குவரத்தில் கட்டாயமாக முகக்கவசம் அணிவது போன்ற தேசிய அளவிலான கட்டுப்பாடுகளை கூட்டாட்சிப் அரசு நேரடியாக அறிவிக்கலாம்.
இந்த திருத்தங்கள் மற்றும் புதிய நடவடிக்கைகள் மூலம், சுவிட்சர்லாந்து மக்கள் எதிர்கால தொற்றுநோய்களில் சிறப்பாகக் காக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை கூட்டாட்சி அரசு வெளிப்படுத்தியுள்ளது.