சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் காய்கறிகளில் விஷப்பொருள் கண்டுபிடிப்பு
சுவிட்சர்லாந்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் காய்கறிகளில் பெரும்பாலானவற்றில் மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சுப் பொருட்கள் இருப்பது குறித்து கவலைக்கிடமான தகவல் வெளியாகியுள்ளது. நுகர்வோர் இதழான KTipp மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக பல்வேறு வகையான 25 காய்கறி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், அவற்றில் 16 வகைகளில் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய PFAS எனப்படும் இரசாயனங்கள் காணப்பட்டதாக இந்தக் கணக்கில் தெரியவந்துள்ளது. PFAS என்பது நீண்ட காலம் சூழலில் நீடிக்கும் மற்றும் மனித உடலில் தேங்கக்கூடிய நச்சுப் பொருள்களாக கருதப்படுகின்றன. இவை பல்வேறு நோய்களுக்கு காரணமாக இருக்கக்கூடும் என ஆராய்ச்சிகள் ஏற்கனவே எச்சரித்து வருகின்றன.
இந்த ஆய்வில் குறிப்பாக கேரட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளில் அதிக அளவில் இந்த நச்சுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளரிக்காய், லெட்டூஸ் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளில் இதைவிட சற்று குறைந்த அளவு மாசுபாடு இருந்தாலும், அவற்றிலும் PFAS இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உயிர்ச்சத்து (organic) காய்கறிகள் இந்த நச்சுப் பொருட்களால் குறைவாக பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, Coop மற்றும் Lidl ஆகிய நிறுவனங்களில் விற்கப்படும் organic கேரட்டுகளில் PFAS அளவு, Migros மற்றும் Aldi நிறுவனங்களின் சாதாரண கேரட்டுகளுடன் ஒப்பிடும்போது சுமார் பாதியாக இருந்ததாக ஆய்வு கூறுகிறது.
சுவிட்சர்லாந்தில் உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் உலகின் உயர்ந்த தரங்களில் ஒன்றாக இருந்தாலும், இத்தகைய கண்டுபிடிப்புகள் நுகர்வோரிடையே புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, நீண்ட கால உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய PFAS போன்ற இரசாயனங்கள் உணவுப் பொருட்களில் இருப்பது குறித்து அதிகாரிகள் மேலும் தீவிரமாக கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த விவகாரம் தற்போது சுவிட்சர்லாந்தில் உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நுகர்வோர் உரிமைகள் குறித்து புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.