ஜெனீவாவில் பார்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் பைரோடெக்னிக் சாதனங்களுக்கு தடை
Switzerland நாட்டில் தீ பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், Geneva கன்டோன், அனைத்து பார்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிலையங்களுக்குள் பைரோடெக்னிக் அதாவது தீப்பொறி விளைவிக்கும் ரசாயன சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. இந்த முடிவை ஜெனீவா மாநில அரசுக் குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம், Vaud மற்றும் Valais கன்டோன்களில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட இதே போன்ற தடைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, வலைஸ் கன்டோனில் உள்ள Crans-Montana பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளை ஏற்படுத்திய தீ விபத்துக்குப் பிறகு, பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவா அதிகாரிகளின் விளக்கத்தின்படி, இந்தத் தடை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுவதாகவும், பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து அபாயங்களை குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனுடன், கன்டோன் முழுவதும் நடைமுறையில் உள்ள தீ பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விரிவான மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 4,000 பார்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களை நடத்தும் நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்படவுள்ளது. அதில், தீ பாதுகாப்பு தொடர்பான சோதனைகளை மேலும் கடுமையாக்குமாறு அறிவுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட இடங்களில் இலக்கு வைத்த ஆய்வுகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் சுற்றுலா மற்றும் இரவுப் பொழுதுபோக்கு கலாசாரம் முக்கிய இடம் வகிக்கும் நிலையில், சமீபத்திய சம்பவங்கள் பாதுகாப்பு விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஜெனீவா கன்டோனின் இந்த முடிவு, பொதுப் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
© WRS