டாவோஸ் WEF மாநாடு: சூரிச் விமான நிலையத்தில் கூடுதல் 1,000 விமான இயக்கங்கள் எதிர்பார்ப்பு
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மன்றம் (World Economic Forum – WEF) மாநாடு இந்த ஆண்டு ஜனவரி நடுப்பகுதியில் நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு சூரிச் (Zürich) விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கவுள்ளது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் பெரும்பாலும் சூரிச் விமான நிலையம் வழியாகவே டாவோஸுக்கு பயணம் செய்வதால், இந்த நாட்களில் கூடுதல் விமான இயக்கங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
WEF 2026 மாநாடு ஜனவரி 19 திங்கட்கிழமை தொடங்கி, ஜனவரி 23 வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. மாநாட்டுக்கு முன், மாநாட்டு நாட்களில் மற்றும் அதன் பின்னரும், தனியார் வணிக ஜெட்கள், அரசுத் தலைவர்கள் பயன்படுத்தும் விமானங்கள் மற்றும் அரசியல், பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகரிக்கும் ஹெலிகாப்டர் பயணங்கள் காரணமாக, மொத்தமாக சுமார் 1,000 கூடுதல் விமான இயக்கங்கள் இடம்பெறும் என Flughafen Zürich மதிப்பிட்டுள்ளது. பலர் தங்கள் பயணத் திட்டங்களை கடைசி நேரத்தில் உறுதி செய்வதும், விமானங்களை நிறுத்துவதற்கான இடங்கள் குறைவாக இருப்பதும் காரணமாக, இந்த எண்ணிக்கை ஒரு கணிப்பாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களில், இரவு 11.30 மணிக்குப் பிறகும் விமான இயக்கங்கள் நடைபெறக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் Jet Aviation நிறுவனம், சூரிச் விமான நிலைய நிர்வாகத்துடன் இணைந்து, WEF விருந்தினர்களுக்கு Sustainable Aviation Fuel Blend (SAF) எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளை பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. இது விமானப் போக்குவரத்தின் கார்பன் வெளியீட்டை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
விமான நிலையத்தின் மேற்கு பகுதி மற்றும் ஓபர்கிளாட் (Oberglatt) பகுதியிலும் பிரபலமான விமானக் காட்சி இடங்கள் உள்ளன. இதே நேரத்தில், மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் சிறப்பு WEF சுற்றுப்பயணங்களும் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக, ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் வழிகாட்டி சுற்றுப்பயணங்கள் மற்றும் விமான நிலைய சுற்றுலா பயணங்கள் நடைபெறாது.
WEF மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பதால், சில நேரங்களில் பார்வையாளர் வசதிகளில் தற்காலிக கட்டுப்பாடுகள் அல்லது மூடல்கள் அமல்படுத்தப்படலாம். இதில் விமான நிலைய வேலிக்கருகே உள்ள spotter இடங்கள் பாதிக்கப்படலாம். இருப்பினும், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பயணிகள் சேவைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும், விமான நிலையத்திற்கான வருகை–புறப்பாடு வழிகள் மற்றும் பயணிகள் செயல்முறைகள் வழக்கம்போலவே இருக்கும் என்றும் விமான நிலைய நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
© Flughafen Zürich AG