சுவிட்சர்லாந்தில் பாதிக்கும் மேற்பட்டோர் கடந்த ஆறு மாதங்களில் சேமிக்க முடியாமல் தவிப்பு
சுவிட்சர்லாந்தில் மக்கள் பெரும்பாலோர் சேமிக்க விருப்பம் கொண்டிருந்தாலும், நடைமுறையில் அதனைச் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். (பாலொய்ஸ்) Baloise நிறுவனம் மற்றும் YouGov Switzerland சந்தைப்படுத்தல் ஆய்வு மையம் இணைந்து நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின் படி, சுவிஸ் மக்களில் 79 சதவீதம் பேர் சேமிப்பு முக்கியம் என்று கருதினாலும், கடந்த ஆறு மாதங்களில் உண்மையில் சேமிக்க முடிந்தவர்கள் வெறும் 47 சதவீதம் மட்டுமே. அதிக நிலையான செலவுகள் (fixed costs) முக்கிய தடையாகக் கூறப்பட்டுள்ளன.
ஆனால் சேமிப்பவர்களில் சுமார் பாதி பேர் மாதந்தோறும் 1,000 ஃபிராங்க் வரை சேமிக்க முடிந்துள்ளதாகக் கூறியுள்ளனர். எதிர்பாராத செலவுகளை சமாளிப்பதே சேமிப்பின் முதன்மை நோக்கமாக அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், வீட்டை வாங்குவதற்காக மற்ற வயது குழுக்களைவிட அதிகம் சேமித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
முன்கூட்டிய ஓய்வு வாழ்க்கையும் பலரின் கனவாக இருந்தாலும், அதை அடைய திட்டமிட்டு செயல் படுத்துவோர் மிகக் குறைவு. கணிப்பில் பங்கேற்றவர்களில் வெறும் 11 சதவீதம் பேர் மட்டுமே இதற்காக செயலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். அதேசமயம், மூன்றில் ஒருபங்கு பேர், முன்கூட்டியே ஓய்வு பெறுவது நிதியளவில் சாத்தியமற்றது என்று கருதுகின்றனர்.
தற்போது, சுமார் 57 சதவீத சுவிஸ் மக்கள் தங்களது நிதி நிலைமையில் திருப்தியாக இருப்பதாகக் கூறினாலும், நீண்ட கால நிதி பாதுகாப்பில் நம்பிக்கை கொண்டவர்கள் 44 சதவீதம் மட்டுமே. ஓய்வூதிய அமைப்பின் எதிர்காலம் மற்றும் போதுமான ஓய்வூதியம் கிடைக்காத நிலைமை குறித்து பெரும்பான்மையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், நிதி அறிவு குறைவாக இருப்பதையும் பலர் ஒப்புக்கொண்டுள்ளனர். கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 60 சதவீதம் பேர் தங்களது நிதி அறிவை ‘மிதமானது அல்லது அதற்குக் குறைவானது’ என மதிப்பிட்டுள்ளனர். இதனால், பள்ளி நிலை முதலே நிதி கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என பெரும்பாலோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பெரும்பான்மையோர் குடும்பம், நண்பர்கள் அல்லது ஆலோசகர்களிடமிருந்து மட்டுமே இத்தகைய அறிவை பெறுகின்றனர்.
இந்த பிரதிநிதித்துவ கருத்துக்கணிப்பில், 15 முதல் 79 வயதுவரை உள்ள 2,032 பேர் சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்றனர்.
© KeystoneSDA