தீப்பற்றிய கட்டிடங்களில் பறக்கும் ‘ஃபயர்ட்ரோன்’: தீயணைப்பு வீரர்களின் பாதுகாப்புக்கு புதிய தொழில்நுட்பம்
தீப்பற்றிய கட்டிடங்களுக்குள் நேரடியாக நுழைய வேண்டிய அபாயத்தை குறைத்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் வீரர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ‘Firedrone’ எனப்படும் புதிய ட்ரோன் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை Empa திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. தற்போது தீ விபத்து நேரங்களில் ஆபத்தான பொருட்கள் அல்லது காணாமல் போனவர்களை கண்டறிய தீயணைப்பு வீரர்கள் நேரடியாக எரியும் கட்டிடங்களுக்குள் செல்ல வேண்டிய சூழல் உள்ளது என இந்த திட்டத்தின் உருவாக்குநரான ஃபேபியன் வீசமுல்லர் தெரிவித்துள்ளார்.
இந்த ‘Firedrone’ ட்ரோன், தொழிற்சாலை ஹால்கள், வாகன நிறுத்துமிடங்கள், சுரங்கங்கள் போன்ற பெரிய மற்றும் சிக்கலான கட்டிடங்களில் பயன்படுத்தப்படுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களில் மனிதர்கள் நேரடியாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகுந்த ஆபத்தானதாக இருக்கும். மேலும், சிமெந்து அல்லது எஃகு தொழிற்சாலைகள் போன்ற அதிக வெப்பம் நிலவும் தொழிற்துறை அமைப்புகளில் ஆய்வுகளை மேற்கொள்ளவும் இந்த ட்ரோன் பயன்படும். இதன் மூலம் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் மற்றும் செலவு அதிகமான குளிரூட்டல் நடவடிக்கைகள் இல்லாமலேயே ஆய்வுகளை செய்ய முடியும்.

சாதாரண ட்ரோன்கள் சுமார் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே செயலிழக்கும் நிலையில், ‘Firedrone’ 200 டிகிரி செல்சியஸ் வரை பறக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நுட்பமான மின்னணு கூறுகள், புதிய வகை போலிஇமைடு ஏரோஜெல் பொருளால் உருவாக்கப்பட்ட தனிப்பட்ட உள்வெப்ப பாதுகாப்பு அடுக்கினால் மூடப்பட்டுள்ளன. இலகுவான இந்தப் பொருளுடன், உள் வெப்ப மேலாண்மை அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
இன்ஃப்ராரெட் கேமராவுடன் கூடிய இந்த ட்ரோன், நேரடி வெப்பப் படங்களை கட்டுப்பாட்டு குழுவிற்கு அனுப்பும் திறன் கொண்டது. இதன் மூலம், கட்டிடத்திற்குள் மனிதர்கள் நுழைவதற்கு முன்பே, பாதுகாப்பான தூரத்தில் இருந்து நிலைமையை மதிப்பிட முடியும். மேலும், கட்டிடங்களுக்குள் GPS சிக்னல் கிடைக்காத சூழ்நிலையில் பயன்படுத்துவதற்காக, சிறப்பு இடம் கண்டறியும் தொழில்நுட்பங்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய பறக்கும் ரோபோட் Empa நிறுவனத்தில் உருவாக்கப்பட்டு, தற்போது Empa மற்றும் EPFL இணைந்து நிறுவிய துணை நிறுவனத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம், ஆண்டெல்ஃபிங்கன் பயிற்சி மையத்தின் பயிற்சி வளாகத்திலும், ஒரு சிமெந்து தொழிற்சாலையிலும் இந்த ட்ரோனை சோதனை செய்து பார்த்துள்ளது.
எதிர்காலத்தில், தீயணைப்பு வாகனங்களில் பொருத்தக்கூடிய மொபைல் டாக்கிங் மற்றும் பராமரிப்பு நிலையுடன் இந்த அமைப்பை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவசரநிலைகளில் ட்ரோனை விரைவாக பயன்படுத்தும் திறன் மேலும் மேம்படும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
© radiocentral