பெர்ன் கன்டோனில் ஆயுதம் கொண்ட நபரை கைது செய்யும் நடவடிக்கை
சுவிட்சர்லாந்தின் பெர்ன் கன்டோனில் உள்ள ஜூரா பெர்னுவா பகுதியில், ரெகோன்விலியர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கன்டோனல் போலீசார் ஞாயிற்றுக்கிழமை அன்று அறிவுறுத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல், ஆயுதம் வைத்திருக்கலாம் என்றும் ஆபத்தானவராக கருதப்படுகின்ற ஒரு நபரை கைது செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.
அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, சந்தேகநபருக்கு சுமார் 30 வயது இருக்கும் என்றும், அவர் தலைமுடி இல்லாதவராகவும், கருப்பு நிற ஜம்ப்சூட், வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் வெள்ளை காலணிகள் அணிந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய எந்தவிதமான பயனுள்ள தகவல் தெரிந்தவர்களும் உடனடியாக 112 அல்லது 117 என்ற அவசர எண்களில் காவல்துறையை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போலீஸ் நடவடிக்கையால் டவான்ஸ் மற்றும் ரெகோன்விலியர் இடையிலான முக்கிய சாலை தற்காலிகமாக போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது.. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மை என்பதால், நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் வரும் வரை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் குறித்த சம்பவம் பற்றிய மேலதிக தகவல்களை போலீசார் இன்னும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.