AXA பெயரில் வரும் போலி ‘Refund’ மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் செயல்படும் AXA Versicherungen (அxக்ஷா காப்புறுதி) நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் தற்போது போலி மின்னஞ்சல்களை அனுப்பி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘பணத்தைத் திருப்பிச் செலுத்துதல் என்ற தலைப்புடன் வரும் இந்த மின்னஞ்சல்கள், பொதுமக்களின் உள்நுழைவு விவரங்கள், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை களவாடும் நோக்கத்துடன் அனுப்பப்படுகின்றன.
இந்த போலி மின்னஞ்சல்கள், AXA நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டதுபோல் மிக நம்பகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில், பயனாளருக்கு பணம் திருப்பிச் செலுத்தப்பட இருப்பதாகவும், அந்த வாய்ப்பு அடுத்த ஏழு நாட்களுக்குள் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு அவசர உணர்வை உருவாக்குகின்றனர். இதன் மூலம், பெறுபவர்கள் யோசிக்காமல் உடனடியாக செயல்பட வைக்கப்படுகின்றனர்.
மின்னஞ்சலில் உள்ள இணைப்பை சொடுக்கினால், AXA இணையதளத்தைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு போலி ‘பிஷிங்’ இணையப்பக்கத்துக்கு பயனர் அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு, AXA கணக்கின் உள்நுழைவு விவரங்கள், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகிறது. இந்த தகவல்கள் ஒருமுறை குற்றவாளிகளிடம் சென்றுவிட்டால், அவர்கள் அந்த கணக்கில் சட்டவிரோதமாக நுழைந்து அனுமதியில்லா பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

மேலும் சில சந்தர்ப்பங்களில், கூடுதல் பாதுகாப்பு குறியீடுகளைப் பெறுவதற்காக, குற்றவாளிகள் SMS அல்லது மேலதிக செய்திகளை அனுப்பி, இரட்டை அடையாளச் சரிபார்ப்பு போன்ற பாதுகாப்பு முறைகளையும் தாண்ட முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய சந்தேகமான மின்னஞ்சல்கள் வந்தால், அவற்றை உடனடியாக Cybercrimepolice.ch என்ற இணையதளத்துக்கு அனுப்பி புகாரளிக்கவும், பின்னர் அந்த மின்னஞ்சலை நீக்கவும் அல்லது ஸ்பாம் கோப்புறையில் மாற்றவும் அறிவுறுத்தப்படுகிறது. மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்திகளில் வரும் இணைப்புகளை ஒருபோதும் திறக்கக் கூடாது என்றும், முழுமையான சரிபார்ப்பு இன்றி எந்தவிதமான ரகசிய தகவல்களையும் பகிர வேண்டாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நேரடியாக தொடர்புகொண்டு உறுதிப்படுத்துவது பாதுகாப்பான வழி ஆகும்.
யாரேனும் தங்களது தகவல்களை ஏற்கனவே வழங்கியிருந்தால், உடனடியாக தங்களது வங்கி அல்லது நிதி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட வங்கி அல்லது டெபிட் கார்டுகளை முடக்க வேண்டும். அதேபோல், AXA கணக்கின் கடவுச்சொல்லையும், அதே உள்நுழைவு விவரங்களை பயன்படுத்தும் பிற கணக்குகளின் கடவுச்சொற்களையும் மாற்ற வேண்டும். பின்னர், அருகிலுள்ள கன்டோனல் காவல் துறையை முன்பதிவு செய்து அணுகி, அதிகாரப்பூர்வ புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Cybercrimepolice.ch