2055 வரை சூரிக் மாநில மக்கள் தொகை மெதுவாக அதிகரிக்கும் என கணிப்பு
சுவிட்சர்லாந்தின் சூரிக் மாநில மக்கள் தொகை 2055ஆம் ஆண்டுக்குள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றாலும், அதின் வளர்ச்சி விகிதம் முந்தைய காலத்தை விட மந்தமாக இருக்கும் என்று மாநில புள்ளிவிபரத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையின் படி, சூரிக் மாநிலத்தின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக வெளிநாடுகளில் இருந்து நடைபெறும் குடியேற்றம் (இம்மிக்ரேஷன்) தொடர்ந்தும் விளங்கும். எனினும், நீண்டகாலத்தில் வெளிநாட்டு குடியேற்றத்தின் அளவு சிறிதளவு குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அமைப்பு மூன்று சாத்தியமான வளர்ச்சி நிலைகளைக் கணித்துள்ளது. நடுத்தர நிலை (மிடில் ஸ்கெனாரியோ) படி, 2055ஆம் ஆண்டுக்குள் சூரிக் மாநில மக்கள் தொகை சுமார் 19 இலட்சம் ஆகும். குறைந்த வளர்ச்சி நிலை ஏற்படும் பட்சத்தில் அது 17 இலட்சம் வரை மட்டுமே உயரும். வேகமான வளர்ச்சி நிலை உருவானால், 22 இலட்சம் மக்கள்தொகை அடையக்கூடும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இடம்பெயரும் மக்கள் எண்ணிக்கை எதிர்காலத்தில் சிறிதளவு அதிகரிக்கும் என்றும் புள்ளிவிபர அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், பிறப்புகளும் இறப்புகளும் இடையிலான வித்தியாசம் (பிறப்பு அதிகம்) மாநில மக்கள் தொகை வளர்ச்சிக்கு மிகச்சிறிய அளவு மட்டுமே பங்களிக்கிறது என்றும் எதிர்காலத்தில் அதுவும் மேலும் குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில தசாப்தங்களில் சூரிக் மாநில மக்கள்தொகை முதியோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பைச் சந்திக்கும். இதன் பொருள், வேலை வயது மக்களுடன் ஒப்பிடும்போது ஓய்வு பெற்றோரின் விகிதம் வேகமாக உயரும் என்பதாகும். இந்த முதிர்ச்சி நிலை குறிப்பாக ஓபர்லாந்த் (Oberland) மற்றும் க்னோனௌஎர்ஆம் (Knonaueramt) போன்ற கிராமப்புறப் பகுதிகளில் தெளிவாகக் காணப்படும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2055ஆம் ஆண்டில், ஓபர்லாந்த், வைன்லாந்த் (Weinland) மற்றும் ப்ஃபன்னெந்ஸ்டீல் (Pfannenstiel) பகுதிகளில் மக்களின் சராசரி வயது 46 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மாநில சராசரி 44.8 ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகம். அதேசமயம், சூரிக் நகரம் மாநிலத்தில் இளைய வயது மக்கள்தொகையைக் கொண்ட பகுதியாகத் தொடரும்.
சுவிட்சர்லாந்தின் பொருளாதார மையமாக விளங்கும் சூரிக் மாநிலம், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றால் வெளிநாட்டு குடியேற்றத்தை தொடர்ந்து ஈர்த்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், மக்கள் தொகையின் முதிர்ச்சி மற்றும் இயல்பான பிறப்பு விகிதக் குறைவு, எதிர்கால சமூக மற்றும் பொருளாதார திட்டமிடலுக்கு முக்கிய சவாலாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
© KeyStoneSDA