சுவிஸ் எல்லையில் தலையை வெட்டி கொலை : பீதியை கிளப்பும் பகீர் சம்பவம்.!
பிரான்சின் ஃபெட்ரி (Fédry) பகுதியில் கடந்த சனிக்கிழமை இரண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட மனித உடல், சுவிட்சர்லாந்தின் செயின்ட்-க்ரோய்ஸ் (Sainte-Croix) நகரத்தைச் சேர்ந்த 75 வயது மூதவருடையது என பிரான்ஸ் மற்றும் சுவிஸ் அதிகாரிகள் இருவரும் உறுதி செய்துள்ளனர். அந்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்தார்.
மரணமடைந்த இவர் செயின்ட்-க்ரோய்ஸ் நகரத்தின் சமூக வாழ்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர். பல சமூக அமைப்புகளில் உறுப்பினராக இருந்ததோடு, நீண்ட காலம் உள்ளூர் அரசியலிலும் லிபரல் கட்சி (PLR) சார்பில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தார். அவர் நகர சபையின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவமுடையவர்.
செயின்ட்-க்ரோய்ஸ் நகர சபை புதன்கிழமை அவசரக் கூட்டம் கூட்டி, இந்த நிகழ்வை ‘பகுதி முழுவதும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்’ என்று விவரித்தது. நகர மேயரும் தேசிய சபை உறுப்பினருமான இவன் பாஹுட் (Yvan Pahud) கூறியதாவது: “இவர் எங்கள் சமூகத்தில் மதிப்புமிக்க நபர். தனது பகுதியை மிகுந்த அன்புடன் நேசித்தார். உள்ளூர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர். அவருக்கு ஏற்பட்டது உண்மையில் பயங்கரமானது. இப்படிப் பட்ட கதைகள் பொதுவாக நாவல்களில் தான் வாசிக்கப்படும்.”

அவரின் முன்னாள் அரசியல் சகாக்களுள் ஒருவரான ஜான்-ப்ரூனோ வெட்ஸ்டைன் (Jean-Bruno Wettstein) கூறியதாவது: “அவர் செயின்ட்-க்ரோய்ஸின் ‘கோட்டையின் ராஜா’ என்று அழைக்கப்பட்டவர். தன்னம்பிக்கை நிறைந்த, வலுவான எண்ணங்கள் கொண்ட ஒருவராக அனைவராலும் மதிக்கப்பட்டார்.”
சம்பவத்துக்குப் பதினொரு நாட்களுக்கு முன்பு, ‘ஷாத்தோ’ (Château) எனப்படும் பகுதியிலுள்ள ஒரு விவசாயக் கட்டிடம் தீக்கிரையானது. அந்த வீடு மறைந்தவருக்கே சொந்தமானது எனவும் பிரான்ஸ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த தீ விபத்துக்கும், தற்போது நடைபெறும் கொலை விசாரணைக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என்பதை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இந்த மர்மமான கொலைச் சம்பவம் சுவிட்சர்லாந்து-பிரான்ஸ் எல்லைப் பகுதிகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாடுகளின் விசாரணை குழுக்களும் இணைந்து, இந்த கொலைக்குப் பின்னால் யார் இருப்பது என்பதை கண்டறிய தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.