தன்னார்வ அடிப்படையிலான மின்னணு அடையாள அட்டை (e-ID) திட்டத்தை சுவிட்சர்லாந்து வாக்காளர்கள் ஆதரித்துள்ளனர். சுவிட்சர்லாந்து வாக்காளர்கள் இன்று நடந்த கருத்துக்கணிப்பில் மின்னணு அடையாள அட்டையை அங்கீகரித்துள்ளனர்.
ஆதரவாக 50.4% வாக்குகள் கிடைக்கப் பெற்றதுடன் எதிராக 49.6% வாக்குகள் அளிக்கப்பட்டன. இந்த குறுகிய வாக்கு வித்தியாசம் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
கருத்துக் கணிப்புகளில் சுமார் 60% ஆதரவு கிடைக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கு சுவிஸ் அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
இது சுவிட்சர்லாந்தில் டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பான இரண்டாவது வாக்கெடுப்பாகும்.2021இல் நடந்த முன் வாக்கெடுப்பில், தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாடு மற்றும் மையப்படுத்தப்பட்ட தரவு சேமிப்பு குறித்து எழுந்த அச்சங்களால் அது நிராகரிக்கப்பட்டது.

புதிய திட்டத்தில், அரசே நேரடி பொறுப்பேற்கும், மேலும் தரவு பயனாளர்களின் ஸ்மார்ட்போன்களில் மட்டும் சேமிக்கப்படும். e-ID விருப்பத்திற்குரியதாக இருக்கும். விரும்பினால் மக்கள் பாரம்பரிய தேசிய அடையாள அட்டையை தொடர்ந்தும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
தனியுரிமை பாதுகாப்பை உறுதி செய்ய, குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு தேவையான தகவல் (உதா: வயது நிரூபிப்பு, குடியுரிமை) மட்டும் வழங்கப்படும்.
ஆனால் எதிர்ப்பாளர்கள், இந்த திட்டம் இன்னும் தனியுரிமையை பாதிக்கக்கூடும் என்றும், தரவு விளம்பர நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளனர்.