சுவிட்சர்லாந்தின் அழகிய கிராமங்களில் சேர்க்கப்பட்ட வலே மாகாணத்தின் சாம்பெரி
சுவிட்சர்லாந்தின் வலே (Valais) மாகாணத்தில் அமைந்துள்ள சாம்பெரி (Champéry) என்ற சிறிய மலைப் பகுதி கிராமம், நாட்டின் “மிக அழகான கிராமங்கள்” பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
மொன்தே (Monthey) மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமம், அதன் வரலாற்று மற்றும் கட்டிடக் கலை மரபுகளுக்காக சிறப்பாக திகழ்கிறது என “சுவிட்சர்லாந்தின் அழகிய கிராமங்கள் சங்கம்” வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாம்பெரி, இயற்கை அழகு, பாரம்பரியம், விவசாய கலாசாரம் மற்றும் விளையாட்டு, பொழுதுபோக்கு வாழ்க்கை ஆகியவற்றுக்கிடையே ஒரு அரிய சமநிலையை பிரதிபலிக்கிறது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

சுமார் 1,400 மக்கள்தொகையைக் கொண்ட சாம்பெரி, ஆல்ப்ஸ் மலைப் பகுதியின் இயற்கை சூழலில் அமைந்துள்ளதால், சுற்றுலா பயணிகளிடையே நீண்ட காலமாக பிரபலமான இடமாக இருந்து வருகிறது.
இந்தச் சேர்க்கையுடன், சுவிட்சர்லாந்தின் 19 மாகாணங்களில் உள்ள மொத்தம் 56 கிராமங்கள் “மிக அழகான கிராமங்கள்” பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இது, சுவிட்சர்லாந்தின் கிராமப்புறங்களின் பாரம்பரியம், இயற்கை மற்றும் பண்பாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.
© Keystonesda