ஏரிக்கடியில் கிடந்த இரும்புப் பந்து – மதுபான நிறுவனத்தின் மறந்துபோன சோதனை
சுவிட்சர்லாந்தின் Thurgau மாகாணத்தில் அமைந்துள்ள Constance ஏரியின் அடிப்பகுதியில், பெரிய இரும்புப் பந்து ஒன்று தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது. ஏரிக்கடியில் ஏதேனும் பொருட்கள் உள்ளதா என ரோபோ கருவியின் உதவியுடன் ஆய்வு செய்துகொண்டிருந்த ஒருவருக்கு இந்த இரும்புப் பந்து கண்ணில் பட்டுள்ளது.
இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அந்தப் பந்து ஏரியிலிருந்து மீட்கப்பட்டது. விசாரணையில், அது ஒரு மதுபான நிறுவனத்தின் சோதனை முயற்சிக்காக பயன்படுத்தப்பட்ட இரும்புப் பந்து என்பது தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு, குறிப்பிட்ட சுவையை உருவாக்கும் நோக்கில், சுமார் 230 லிற்றர் மதுபானத்தை அந்த இரும்புப் பந்துக்குள் நிரப்பி, 100 நாட்களுக்கு Constance ஏரிக்குள் மூழ்கவைத்துள்ளனர்.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மீட்கப்பட வேண்டிய அந்தப் பந்து, மீட்பு முயற்சியின்போது காணாமல் போயுள்ளது. இதனைத் தொடர்ந்து அது திருட்டுப் போயிருக்கலாம் என சந்தேகித்து, அந்த நிறுவனம் பொலிசில் புகார் அளித்திருந்தது. பல மாதங்களுக்குப் பிறகு, தற்போது அந்த இரும்புப் பந்து தற்செயலாக மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த மதுபானத்தின் ஒரு போத்தல் விலை 99 சுவிஸ் ஃப்ராங்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்கப்பட்ட இரும்புப் பந்து தற்போது மீண்டும் மதுபான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்த நபருக்கு ஏதேனும் சன்மானம் வழங்கப்படுமா என்பது குறித்து இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.