சுவிட்சர்லாந்து கண்ட மிக மோசமான துயரங்களில் ஒன்று – அதிபர் பார்மலின்
கிரான்ஸ்-மொண்டானாவில் புத்தாண்டு இரவில் நிகழ்ந்த பார்தீ விபத்து, சுவிட்சர்லாந்து வரலாற்றில் மிகக் கடுமையான துயரங்களில் ஒன்றாகக் கருதப்படுவதாக நாட்டின் புதிய அதிபர் Guy Parmelin தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 114-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சுமார் 80 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று பதவியேற்ற அதிபர் பார்மலின், அதிபராக பொறுப்பேற்ற பின் தனது முதல் அதிகாரப்பூர்வ நடவடிக்கையாக, இந்த விபத்து நிகழ்ந்த வலைஸ் மண்டலத்தின் கிரான்ஸ்-மொண்டானா பனிச்சறுக்கு சுற்றுலா நகருக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார். சம்பவத்தின் தீவிரம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரம் தன்னை ஆழமாக பாதித்ததாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்து மத்திய அரசு (Federal Council) வெளியிட்ட அறிக்கையில், “2026 ஜனவரி 1 அன்று கிரான்ஸ்-மொண்டானாவில் நிகழ்ந்த இந்த பேரவலத்தை நினைத்து நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளோம். உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதும், இந்த தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியும் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர் என்பதால், இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அனைவரையும் முழுமையாக அடையாளம் காண “இன்னும் பல நாட்கள் ஆகும்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளுக்காக, சுவிட்சர்லாந்திலும் வெளிநாடுகளிலும் இருந்து தொடர்பு கொள்ளக்கூடிய 041 848 112 117 என்ற உதவி தொலைபேசி எண் செயல்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
© KeystoneSDA