சென்ட்கேலன் கன்டோனில் தொடர் திருட்டுகள்: ஐந்து வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள்
சென்ட்கேலன் கன்டோனில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை காலை வரை (20.12.2025) குறைந்தது ஐந்து திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கன்டோன் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களில் மர்ம நபர்கள் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றதுடன், வீடுகளுக்கு கணிசமான சேதமும் ஏற்படுத்தியுள்ளனர்.
ராப்பர்ஸ்வில்-யோனா, ஆல்ட்ஸ்டேட்டன், க்ரீஸ்ஸெர்ன் மற்றும் மொன்ட்லிங்கன் பகுதிகளில் உள்ள தனியார் வீடுகளை குறிவைத்து திருடர்கள் செயல்பட்டுள்ளனர். ஜன்னல்கள் அல்லது தோட்டத்திற்குச் செல்லும் கதவுகளை உடைத்து பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், அறைகளை அலசி ஆராய்ந்து மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு மேலாக, சாக்ஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிலும் திருட்டு நடந்துள்ளது. அங்கு, மர்ம நபர்கள் குடியிருப்பு கதவை உடைத்து உள்ளே நுழைந்து, வீட்டின் உள்ளக பகுதிகளை சோதனை செய்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த தொடர் திருட்டுகள் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களை கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் சென்ட்கேலன் கன்டோன் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குளிர்கால விடுமுறை காலத்தில் வீடுகளை பாதுகாப்பாக வைத்திருக்க மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© Kapo SG