லுகார்னோ பகுதியில் முன்னாள் காவலர் மீது பாலியல் குற்றச்சாட்டு: மனநல ஆய்வு முடிவு வெளியீடு
சுவிட்சர்லாந்தின் லுகார்னோ பகுதியில் உள்ள ஒரு நகராட்சி காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் காவலர், குழந்தைகளுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், குழந்தை பாலியல் ஈர்ப்பு குறைபாடு (பெடோபீலியா) கொண்டவர் என மனநல ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தகவலை RSI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மனநல மருத்துவ பரிசோதனையில், குறித்த நபருக்கு மீண்டும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது குற்றப் பொறுப்பை குறைக்கும் வகையிலான மனநலக் குறைபாடு எதுவும் இல்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் தொடக்கத்தில், அவர் தண்டனையை முன்கூட்டியே அனுபவிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த வழக்கு தற்போது விசாரணை நிலையில் உள்ளதுடன், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான பல சந்தேகங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், அவரது மகனை துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பாக மருத்துவ பணியாளர்கள் சந்தேகத்திற்கிடமான காயங்களை கண்டறிந்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.
அதன் பின்னர், சந்தேக நபரின் கைபேசி ஆய்வு செய்யப்பட, மேலும் முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து குழந்தைகளுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவர் முன் காவலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 20min