‘ஈழக்கூத்தன்’ ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் ஆவணப்பட வெளியீடு – தன்னிகரற்ற ஆளுமைகளை கொண்டாடுவதும், மாண்பேற்றுவதும் வாழும் தலைமுறைகளின் வரலாற்றுக் கடமையாகும்.
சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி, ஈழத்தமிழ் நாடக உலகின் முக்கிய நாயகர்களில் ஒருவரும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் நாடக, ஊடக முன்னோடியுமான ஏசீ தாசீசியஸ் அவர்களின் வரலாற்றுப் பதிவை ‘ஈழக்கூத்தன் ஏசி தாசீசியஸ்’ என்ற ஓர் ஆவணக் காணொலியைத் தயாரித்திருக்கிறது.
அறுபதாண்டுகளாக தமிழ் நாடக வளர்ச்சியில் பங்கெடுத்துவரும் நாடக ஆளுமைகள், ஈழத்திலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் மட்டுமல்லாது வெளிநாட்டு நாடகக் கலைஞர்களும் ஈழக்கூத்தனுடனான தமது நாடகப் பயணப் பகிர்வை பகிர்ந்துள்ளார்கள்.
ஆவணப்படத்துக்கான இந்திய தேசிய விருதுபெற்ற இயக்குனர் அம்சன் குமார் அவர்கள் இதனை இயக்கியுள்ளார். மே 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெறும் திரையிடலுக்கு, கலைஞர்கள் சமூகஆர்வலர்கள் ஊடகவியளாளர்கள் என கலை ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இது தனி நபர் துதிபாடும் காணொலி அல்லாது, ஈழத்தமிழ் சமூகத்தின் வாழ்வியலையும், அவர்களது நாடக வரலாற்றைத் தெரிவிக்கும் காணொலியாக உங்கள் முன் வைக்கப்படுகிறது என நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நமது கலை பண்பாட்டு வரலாற்றை நாம் அறிந்து எமது பிள்ளைகளுக்கு, எமது அரங்கியற் கலையின் பெரு வீச்சுகளையும், பிதாமகர்களையும் பற்றிய வரலாறுகளை கற்றுக்கொடுப்பது எமது வரலாற்றுக் கடமையாகும்.