2026ல் சுவிட்சர்லாந்து பொருளாதாரம்: மந்தமா அல்லது மீட்பா? முரண்படும் கணிப்புகள்
2026ஆம் ஆண்டுக்கான சுவிட்சர்லாந்து பொருளாதார நிலவரம் குறித்து இரு முக்கிய அரசாங்க மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் முற்றிலும் மாறுபட்ட கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்த எதிர்மறை–நம்பிக்கை கலந்த பார்வைகள், அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து நிலவும் குழப்பத்தையும் அனிச்சயத்தையும் வெளிப்படுத்துகின்றன.
சுவிட்சர்லாந்து பொருளாதார நிறுவனம் (KOF) வெளியிட்ட கணிப்பில், 2026ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 1.1 சதவீதமாக மட்டுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா விதித்திருந்த சில சுங்க வரிகள் குறைக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள சாதகமான விளைவுகள் இருந்தாலும், சர்வதேச பொருளாதார சூழலில் காணப்படும் மோசமான போக்குகள் அந்த நன்மைகளை பகுதியளவில் குறைத்து விடுகின்றன என சுவிட்சர்லாந்து பொருளாதார நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. உலக சந்தைகளில் நிலவும் மந்தநிலை, அரசியல் மற்றும் வர்த்தக அநிச்சயங்கள் சுவிட்சர்லாந்தின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்ற கவலையும் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, மாநில பொருளாதார விவகாரங்களுக்கான செயலகம் (SECO) வெளியிட்டுள்ள மதிப்பீட்டில், அமெரிக்கா சுவிட்சர்லாந்து தயாரிப்புகளுக்கு விதித்திருந்த சுங்க வரிகளை குறைத்தது, நாட்டின் பொருளாதார எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி துறை மற்றும் தொழில்துறை வளர்ச்சி பெறும் என்றும், அதனால் பொருளாதாரத்தில் மிதமான நம்பிக்கை நிலவுகிறது என்றும் SECO தெரிவித்துள்ளது.
இவ்விரு நிறுவனங்களின் பார்வைகள் மாறுபட்டிருந்தாலும், ஒரு விஷயத்தில் இருவரும் ஒரே கருத்தில் உள்ளனர். அதாவது, 2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நிலவரம் குறித்து நிலவும் அனிச்சயம் இன்னும் அதிகமாகவே உள்ளது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், வர்த்தக கொள்கைகள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறு மாறும் என்பது தெளிவில்லாததால், எதிர்கால கணிப்புகளில் எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய அவசியம் உள்ளது என இரு தரப்பும் சுட்டிக்காட்டுகின்றன.
© KeystoneSDA